தொப்பூர்‌ கணவாய்‌ மலைப்பாதையில்‌ நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு 30 கி.மீ. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 ஜூலை, 2021

தொப்பூர்‌ கணவாய்‌ மலைப்பாதையில்‌ நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு 30 கி.மீ.


தருமபுரி-சேலம்‌ தேசிய நெடுஞ்சாலை (1117-44) தொப்பூர்‌ கணவாய்‌ வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள்‌ செல்கின்றன. தொப்பூர்‌ கணவாய்‌ பகுதிகளில்‌ அடிக்கடி சாலை விபத்துக்கள்‌ ஏற்படுவதால்‌ ஏராளமான உயிரிழப்புகள்‌ ஏற்படுகின்றன. இம்மலைப்பாதையில்‌ நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு 30 கி.மீ, ஆகும்‌. 


வாகன ஓட்டிகள்‌ நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாவும்‌, வாகனத்தை ஒன்றன்‌ பின்‌ ஒன்றாக இயக்காமலும்‌ மற்றும்‌ சாலை விதிகளை பின்பற்றாமல்‌ செல்வதாலும்‌ அடிக்கடி விபத்துக்கள்‌ ஏற்பட்டு உயிரிழப்புகள்‌ ஏற்படுகின்றன. விபத்துக்களை குறைக்கும்‌ பொருட்டு தற்காலிக தீர்வாக கீழ்கண்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ஆஞ்சநேயர்‌ கோயில்‌ எதிரில்‌ உள்ள சிறுபாலத்தின்‌ உயரம்‌ மற்றும்‌ அகலம்‌ அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • வெள்ளக்கல்‌ மற்றும்‌ கட்டமேடு சந்திப்புகளுக்கு முன்பு பிரதிபலிக்கும்‌ தற்காலிகதடுப்பான்கள்‌ மற்றும்‌ சிவப்பு நிற சோலார்‌ ஒளிரிகள்  3 இடங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது.
  • கட்டமேடு முதல்‌ தொப்பூர்‌ போலீஸ்‌ குவார்ட்டர்ஸ்‌ வரை சுமார்‌ 110 இடங்களில்‌ சாலையின்‌ குறுக்கே சாலை பிடிமானத்திற்காக சொரசொரப்பாக்கப்பட்டுள்ளது செய்யப்பட்டுள்ளது. 
  • ஆஞ்சநேயர்‌ கோயில்‌ முதல்‌ தொப்பூர்‌ போலீஸ்‌ குவார்ட்டர்ஸ்‌ வரை 100 -க்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ ஒளிரும்‌ மின்விளக்குகள்‌ மற்றும்‌ சேலார்‌ மின்‌ விளக்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌. ஆபத்தான 12 இடங்களில்‌ சிவப்பு நிற சோலார்‌ ஒளிரிகள் அமைக்கப்பட்டுள்ளது.
  • இரட்டைப்பாலத்தின்‌ பக்கவாட்டு சுவர்களின்‌ உறுதித்தன்மை மற்றும்‌ உயரம்‌
  • அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • தேசிய நெடுஞ்சாலையில்‌ தொப்பூர்‌ போலீஸ்‌ குவார்ட்டர்ஸ்‌ திரும்பும்‌ சந்திப்பு மற்றும்‌ ஆஞ்சநேயர்‌ கோயில்‌ எதிரிலும்‌ இரண்டு இடங்களில்‌ உயர்கோபுர மின்விளக்குகள்‌ அமைக்கப்பட்டுள்ளது.
  • கட்டமேடு முதல்‌ இரட்டை பாலம்‌ வரை சுமார்‌ 6000 பிரதிபளிக்கும்‌ ரிப்லெக்டர்கள்‌ சாலையில்‌ பொறுத்தப்பட்டுள்ளது.
  • மலைப்பாதையில்‌ 'S' வளைவு மற்றும்‌ குறுகிய வளைவுகள்‌ உள்ள இடங்களில்‌ Chevron Board எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
  • மலைப்பாதையில்‌ ஒளிர்ப்பு திறன்‌ இல்லாத Delineators -களை மாற்றிவிட்டு புதிய Delineators அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அவற்றின்‌ எண்ணிக்கையும்‌ அதிகப்படுத்தப்பட்டுள்ளது. 

தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள செடிகளின்
உயரத்தினை சரியான அளவில் பராமரித்து வாகனங்களின் முகப்பு விளக்குகளால் ஓட்டுநர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் குறைக்கப்பட்டுள்ளது.

மலைப்பாதையில் கட்டமேடு முதல் தொப்பூர் வரை குறைந்த வேகத்தில் செல்லுமாறு ஓட்டுநர்களுக்கு ஒலிப்பெருக்கிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், தொப்பூர் சுங்கசாவடியிலும் ஒலிப்பெருக்கி மூலம் இரண்டாவது கியரில் வாகனத்தை இயக்க ஓட்டுநர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் விபத்துக்களை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை இணைந்து, தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. த.தாமோதரன் மற்றும் தருமபுரி சரக துணை காவல் கண்காணிப்பாளர் திரு. அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நிலை-1, திரு.அ.க.தரணீதர் மற்றும் திரு.ஞா.ராஜ்குமார் ஆகியோர் 28.06.2021 முதல் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறும் வாகனங்களை ரேடார் கருவி (Speed Radar Gun) மூலம் கண்டறிந்து e-Challan மூலம் அபராதம் விதிக்கும் முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ரேடார் கருவி மூலம் வாகனத்தின் புகைப்படத்துடன் வாகனம் வந்த வேகம் குறிக்கப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கடந்த 28.06.2021 முதல் 07.07.2021 வரை 1,014 வாகனங்களுக்கு e-Challan மூலம் ரூ.4,05,600/- அபராதம் விதிக்கப்பட்டது.

தொப்பூர் மலைப்பாதையில் அதிவேகமாக வரும் வாகனங்களை திடீரென நிறுத்தி தணிக்கை மேற்கொண்டால் விபத்து ஏற்படும் என்பதால் வாகனங்களின் வேகத்தை ரேடார் கருவி மூலம் கண்காணித்து அதிவேகமாக இயக்கப்படும் வாகனங்களை புகைப்படம் எடுத்து Parivahan e-Challan கருவி மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது. பதிவேற்றம் செய்தவுடன் வாகன உரிமையாளரின் கைபேசிக்கு உடனடியாக குறுஞ்செய்தி (SMS) சென்று விடும். மேற்கண்ட அபராதத்தை செலுத்தினால் மட்டுமே வாகனங்களுக்கு வரி செலுத்துதல், தகுதிச்சான்று, காப்புச்சான்று புதுப்பித்தல், உரிமை மாற்றம், தவணை கொள்முதல் உடன்படிக்கை உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ள இயலும். 

எனவே, தொப்பூர் மலைப் பாதையில் ஓட்டுநர்கள் 30 கி.மீ., வேகத்திற்குள் வாகனங்களை இயக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி. இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad