வணிகவியல் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த நபர்; கைது செய்த போலீஸ். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 8 ஜூலை, 2021

வணிகவியல் படித்துவிட்டு மருத்துவம் பார்த்த நபர்; கைது செய்த போலீஸ்.

மாரண்டஅள்ளி, பாலக்கோடு, ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி, அமானிமல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிலர் அலோபதி மருத்துவம் பார்த்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் திவ்யதர்சினி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


அதன்பேரில் பாலக்கோடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மருத்துவ குழுவினர் மாரண்டஅள்ளி அருகே கரகூர் கிராமத்தில் உள்ள மருந்து கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையின் உள்புறம் தனி அறை அமைத்து அலோபதி மருத்துவம் பார்த்து வந்தது தெரிந்தது.


இதையடுத்து மருத்துவ குழுவினர் விசாரித்த போது பஞ்சப்பள்ளி அருகே பெரிய கும்மனூரை சேர்ந்த சண்முகம் (வயது 45) என்பவர் வணிகவியல் படித்து விட்டு மருந்து கடை நடத்தி வந்ததும், தனி அறை அமைத்து பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்ததும், போலி டாக்டர் என்பதும் தெரியவந்தது.


இதையடுத்து கிளினிக்கில் இருந்த குளுக்கோஸ், மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் மருந்து கடைக்கு அவர்கள் சீல் வைத்தனர். பின்னர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான மருத்துவ குழுவினர் போலி டாக்டர் சண்முகத்தை மாரண்டஅள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad