தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு, முதியோர் ஓய்வூதியத் தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மொத்தம் 422 மனுக்களை அளித்தனர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய தீர்வு காண வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் அதியமான்கோட்டை வடக்கு தெரு கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மது வாங்க தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. இதனால் 2 மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று கோரி இருந்தனர்
இந்த கூட்டத்தில் அம்பேத்கர் பிறந்தநாள், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் சாந்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். 2020-ம் ஆண்டில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய பட்டு வளர்ச்சி துறை இளநிலை உதவியாளர் ரோஜாவிற்கு ரூ.3 ஆயிரம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) பாபு, சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் சாந்தி, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் ஜெயதேவி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக