புழுக்களுடன் கூடிய குடிநீர்; 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி; பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 3 ஜூலை, 2022

புழுக்களுடன் கூடிய குடிநீர்; 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி; பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.

ஏரியூர் அருகே உள்ள ஏமனூரில் புழுக்களுடன் கூடிய குடிநீர் வழங்கல் 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்.

ஏரியூர் அருகே உள்ள நாகமரை ஊராட்சிக்கு உட்பட்ட ஏமனூரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊர், மூன்று பக்கம் மேட்டூர் நீர் தேக்கத்தாலும், ஒரு பக்கம் அடர்ந்த வனப் பகுதிகளும் சூழப்பட்டதாகும். 

இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்பட்டது காலை மற்றும் மாலை என இரண்டு வேளை மட்டுமே பேருந்து இயங்கி வருகிறது. இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியூர் அல்லது ஆற்றைக் கடந்து சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆகிய பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டி உள்ளது.

இந்த ஊரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது எனவும், அது இடிந்து விடும் நிலையில் உள்ளதாகவும், இதன் காரணமாக இந்த குடிநீர் தொட்டியை யாரும் சுத்தம் செய்வது இல்லை எனவும், சுத்தம் செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகும் எனவும் இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் சுத்தம் செய்யாத இந்தக் குடிநீர் தொட்டியின் மூலம் தான் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த குடிநீரில் புழுக்கள் வருவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இந்த அசுத்தமான நீரை பயன்படுத்துவதால் இந்த ஊரைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டவர்களுக்கு மர்ம காய்ச்சல் மற்றும் பல்வேறு வகையான நோய்கள் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய் பாதித்தவர்கள் ஏரியூர், பென்னாகரம், மேட்டூர், சேலம் உள்ளிட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறினர், அடிப்படைத் தேவைகளை கேட்டால் கூட அலட்சியத்துடன், பொறுப்பில்லாமல் பதில் சொல்லும் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து  இப்பகுதி மக்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் தேவையை தீர்க்க மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும், உடனடியாக மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்ய வேண்டும், குடிநீர் தேவையை தீர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும், பத்து ஆண்டுகளாக செவிலியர் இல்லாமல் பூட்டியே கிடக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முழு நேர மருத்துவரை நியமிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad