மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.7.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்ட புதிய ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (7.7.2022) குத்துவிளக்கேற்றி வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி அவர்கள், திரு.பி.என்.பி.இன்பசேகரன் அவர்கள், புதிய ஏரியூர் அரசு மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் (பொ) திரு.ஜி.பாலசுப்பிரமணியன், ஏரியூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திரு.பழனிசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.மாது, ஏரியூர் ஊராட்சி மன்றத்தலைவர் உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொலிக் காட்சி வாயிலாக இன்று புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஏரியூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டடத்தில் தற்காலிகமாக இயங்கவுள்ளது. இக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் (B.A. Tamil), பி.ஏ.ஆங்கிலம் (B.A. English), பி.காம் (B.Com), பி.எஸ்.சி. கணிதம் (B.Sc. Maths), பி.எஸ்.சி. கணினி அறிவியல் (B.Sc. Computer Science) ஆகிய 5 பாடப்பிரிவுகள் இந்தாண்டு முதல் பயிற்றுவிக்க துவங்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டில் சுமார் 260 மாணவ, மாணவியர்கள் இளங்கலைப் பட்டம் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.7.2022) சென்னை, தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சியின் வாயிலாக உயர்க்கல்வித் துறையின் சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் ரூ.4.52 கோடி மதிப்பீட்டில் 24 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தினையும், தருமபுரி, பாலக்கோடு பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் 30 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தினையும், தருமபுரி, காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் 16 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடத்தினையும், தருமபுரி, பூமாண்டஹள்ளியில் பெரியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மையத்திற்கு ரூ.11.17 கோடி மதிப்பீட்டில் 21 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்கள் கொண்ட புதிய கட்டடங்கள் என மொத்தம் ரூ.24.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 94 வகுப்பறைகள் மற்றும் 6 ஆய்வகங்களுடன் கூடிய புதிய கட்டடங்களையும் திறந்து வைத்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக