அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் அவதி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 6 ஜூலை, 2022

அடிப்படை வசதிகள் இன்றி கிராம மக்கள் அவதி.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்டது தின்னஹள்ளி ஊராட்சி, இந்த ஊராட்சிக்கு உட்பட்ட தின்னஹள்ளி கிராமத்தில் 2,500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தின்னஹள்ளி கிராமத்தை ஒட்டி ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இந்த 2 கிராமத்து மக்களும் அடிப்படை வசதிகளின்றி தொலைந்து போன அத்திப்பள்ளி கிராமத்து மக்கள் போல் வாழ்ந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். 

கிராமத்தில் அடிப்படை தேவையான குடிநீர், தெரு விளக்கு, கழிவுநீர் கால்வாய், தனிமனித கழிப்பறை, சுகாதாரம், உள்ளிட்டவைகளாகும். ஆனால் தின்னஹள்ளி பஞ்சாயத்தில் குடிநீர் வசதி மட்டும் உள்ள நிலையில் மற்ற அடிப்படை தேவைகளான கழிவுநீர் கால்வாய், தனிமனித கழிப்பறை, தெரு விளக்கு, சுகாதாரம், சாலை வசதி, உள்ளிட்ட தேவைகள் ஏதுமின்றி கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.

அன்றாட கழிவு நீர் கிராமங்களில் இருந்து வெளியேறுவதற்கு வழியின்றி ஆங்காங்கே கிராம பகுதிகளில் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையால் பொதுமக்கள் பல வைரஸ் தொற்று நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். கிராமங்களில் உள்ள பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். 

இதனால் பல தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மத்திய, மாநில அரசுகள் தனி மனித கழிப்பறை திட்டத்தை குக்கிராமம் முதல் அனைத்து கிராமங்களிலும் நிறைவேற்றி வருகிறது. தின்னஹள்ளி மற்றும் காலனி பகுதிகளில் தனிமனித கழிப்பறை வசதிகளின்றி பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழித்து வருகின்றனர். மேலும் தின்னஹள்ளி கிராமத்தில் பெண்கள் பொது கழிப்பிடம் பஞ்சாங்கத்து நிர்வாகத்தால் கட்டப்பட்டு செயல்பட்டு வந்தது. தற்பொழுது 3 வருட காலமாக சீரமைக்கப்படாமல் பூட்டி வைக்கப்பட்டு பாம்புகளின் இருப்பிடமாக இருந்து வருகிறது.

கிராமத்தில் உள்ள சாலைகள் பராமரிப்பு செய்யப்படாமல் குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுவதால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக கிராமத்து மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் கண்டுகொள்ளாமல் மெத்தன போக்குடன் இருந்து வருவதாக தின்னஹள்ளி கிராமத்து மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

மேலும் அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய்வசதி, தனிமனித கழிப்பறை உள்ளிட்ட திட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் பஞ்சாயத்து நிர்வாகம் கைகோர்த்து பல முறைகேடு செய்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தின்னஹள்ளி பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீது தனி கவனம் செலுத்தி முறைகேடுகள் நடந்திருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும், பஞ்சாயத்து நிர்வாகத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad