காரிமங்கலத்தில், உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜூன், 2023

காரிமங்கலத்தில், உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் திடீர் ஆய்வு.


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி, மொரப்பூர் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் இன்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., உடன் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.

உணவு பாதுகாப்புத் துறை சார்பாக கடந்த மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள foodsafety.tn.gov.in புகார் செயலியில் பெறப்பட்ட புகார் அடிப்படையில், இன்றைய தினம் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர்  தலைமையில், காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் உள்ளிட்ட குழுவினர் காரிமங்கலத்தில் புகாரில் குறிப்பிட்ட உணவகத்தில் ஆய்வு செய்தனர். 

உணவகம் சமையலறை முறையாக பராமரிக்கப்படாமலும்,  இருட்டடைந்து காணப்பட்டது. சமையல் மூலப் பொருட்கள் மற்றும் சமைத்த உணவுப் பொருட்கள் முறையாக மூடி வைத்து பராமரிக்கவில்லை. மேலும் ஓரிருமுறைக்கு மேல் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் உபயோகம் காணப்பட்டு பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் நெகிழிகள் பறிமுதல் செய்யப்பட்டது. கழிவு பொருட்கள் முறையாக அப்புறப்படுத்தப்படவில்லை .


உணவக உரிமையாளருக்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் உடன் உடனடி அபராதம் ரூபாய்.2000 விதித்து, மேற்படி குறைபாடுகளை ஏழு தினங்களுக்குள் கலைந்து உரிய பதில் அறிக்கை சமர்ப்பிக்க வலியுறுத்தி எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்து உணவகம் செயல்பட தடை விதிக்கப்படும் என எச்சரித்து நியமன அலுவலர் நோட்டீஸ் அளித்தார்.


மாவட்ட நியமன அலுவலர் மேலும் தெரிவிக்கையில் உணவு பாதுகாப்பு துறை சார்பாக ஏற்கனவே புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் புகார் எண் உடன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி மூலம் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட உணவு சார்ந்த புகார்கள் பெறப்பட்டு உரிய  நடவடிக்கை 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் , நடவடிக்கை புகார் தெரிவித்த நுகர்வோர்க்கு செயலி மூலமாக அனுப்பப்பட்டுள்ளது எனவும், பொதுமக்கள் மற்றும் நுகர்வோர்  உணவு மட்டும் உணவு சார்ந்த புகார்களுக்கு tnfoodsafety consumer app  செயலியை பயன்படுத்த கேட்டுக் கொண்டார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad