தருமபுரி வட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 ஜூன், 2023

தருமபுரி வட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம்.


தருமபுரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் தருமபுரி வட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி, ஸ்ரீ விஜய் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் தருமபுரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (16.06.2023) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி, சமமான கல்வி கிடைத்திட வேண்டும் என்ற நிலையினை உருவாக்கிட பல்வேறு சிறப்பு திட்டங்களை பள்ளிக்கல்வித்துறையின் மூலம் அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். 


அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு மாதிரிப் பள்ளிகளை உருவாக்கிட ஆணையிட்டு, தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2021 அக்டோபர் மாதத்திலிருந்து மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு பயின்று வருகின்றனர். இந்த அரசு மாதிரிப்பள்ளியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களின் வசதிக்காக சிறந்த வகுப்பறை வசதி, தங்கும் விடுதி வசதி, சுத்தமான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.


மேலும், இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சிறந்த ஆசிரியர்கள், ஆசிரியைகள் மூலம் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அரசின் பல்வேறு போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியில் சிறப்பான கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றது. இதில் பயிலக்கூடிய மாணவ, மாணவியர்கள் சிறப்பான கல்வி மற்றும் தேவையான தேவையான பயிற்சிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. 


கடந்த இரண்டு ஆண்டுகளில் மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தேசிய அளவிலான பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களில் சேர்ந்துள்ளனர். பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க பயிற்சி கொடுக்கப்படுகிறது. எனவே அனைத்துத் தரப்பு மாணவர்களும் மாதிரிப் பள்ளியில் சேர்வதன் மூலம் பயன்களைப் பெற முடியும். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைவதற்கு சிறப்பான கல்வியை கற்க வேண்டும். இதற்கு பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.கு.குணசேகரன், மாவட்டக் கல்வி அலுவலர் திரு.ஆர்.இரவிச்சந்திரன், பள்ளியின் தலைமையாசிரியர் திரு.க.சக்திவேல், முதுகலை கணித ஆசிரியர் திரு அ.பாலமுருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad