உலக மக்கள் தொகை தினம்-2023 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 ஜூலை, 2023

உலக மக்கள் தொகை தினம்-2023 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உலக மக்கள் தொகை தினம்-2023 உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது, உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு சுதந்திர அமுதப்பெருவிழாவினை கொண்டாடி மகிழ்வோம்! குடும்பநல உறுதி மொழியினை ஏற்று வளம் பெறுவோம் !! என்ற கருப்பொருளை மையமாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்படுகிறது. 

 

மக்கள் தொகை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்தும், குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் குறித்தும் வட்டார வாரியாக பொதுமக்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. மேலும் நவீன தற்காலிக குடும்ப நல கருத்தடை முறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகள் பயன்பாடுகள் குறித்தும் பொதுமக்களிடம் உரிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

உலக மக்கள் தொகை தினம் -2023 உறுதிமொழியான நமது தாய்நாட்டின் மொத்த மேம்பாட்டிற்கும், தாய்மார்களின் நல்வாழ்விற்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும், மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானதும், முக்கியமானதும் ஆகும் என்பதை நான் அறிந்துள்ளேன். 

 

சிறுகுடும்ப நெறி, திருமணத்திற்கேற்ற வயது, முதல் குழந்தையை தாமதப்படுத்த மேற்கொள்ள வேண்டிய குடும்ப நலமுறைகள், முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில் வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல், ஆணும் பெண்ணும் சமம் என்பதற்கு செயல் வடிவம் கொடுத்தல், பெண் சிசுக் கொலையை தடுத்தல், இளம் வயது திருமணத்தை தடுத்தல், இளம் வயது கர்ப்பத்தை தடுத்தல், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் தாக்கத்தை குறைத்தல், சுற்றுப்புற சூழல் பாதிப்பை தடுத்தல், மரம் வளர்ப்பதை ஊக்குவித்தல், வறுமை ஒழிப்பு போன்ற செய்திகளை அனைவருக்கும் எடுத்துக் கூறுவதில் என்னை நான் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வேன் , 


குடும்பநலத் திட்டங்களை மக்கள் இயக்கமாக மலரச் செய்ய என்னை நான் முழுமையாக அர்பணித்துக் கொள்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். என்னுடைய இந்த முயற்சிகள் வெற்றியடைய இயற்கை எனக்கு துணை நிற்கட்டும், சுதந்திர அமுதப்பெருவிழாவினை கொண்டாடி மகிழ்வோம்! குடும்பநல உறுதி மொழியினை ஏற்று வளம் பெறுவோம் !! என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையேற்று வாசிக்க அரசுத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். 


இதனைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற உலக மக்கள் தொகை தினம் விழிப்புணர்வு ரதம் மற்றும் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி இலக்கியம்பட்டியில் முடிவடைந்தது. இப்பேரணியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 

 

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  வழங்கினார். 

 

இந்நிகழ்ச்சியில் அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் அமுதவல்லி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ஜெயந்தி, துணை இயக்குநர் குடும்ப நலன் (பொ) எழிலரசி, துணை இயக்குநர்கள் புவனேஸ்வரி (தொழுநோய்), ராஜ்குமார் (காசநோய்) உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad