பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு முகாம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஜூலை, 2023

பாலக்கோட்டில், உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு முகாம்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டில் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக பாலக்கோடு அறிவு திருக்கோயில் மனவளக்கலை பயிற்சி மன்ற வளாகத்தில் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெற,  மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் அனைத்து வணிகர் சங்க தலைவர் முத்து, செயலாளர் சரவணன், பொருளாளர் மாணிக்கம் அவர்கள் முன்னிலையில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் எற்பாட்டின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ.பானு சுஜாதா, எம்.பி.,பி.எஸ்., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 


இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006 மற்றும் விதிகள் 2011 படி, உணவு பொருள் தயாரிப்பாளர்கள் , விற்பனையாளர்கள், உணவகங்கள், பேக்கரிகள், மொத்தம் மட்டும் சில்லறை விற்பனை , விநியோகஸ்தர்கள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குளிர்பான தயாரிப்பு நிறுவனங்கள், பால் மற்றும் பால் பொருள் தயாரிப்பு  மற்றும் பால் சார்ந்த விற்பனையாளர்கள், இறைச்சி கடைகள், சாலை ஓர துரித உணவுகள், பானி பூரி,பலகார மற்றும் பழகடைகள், பழமண்டிகள், கரும்பாலைகள், வெல்லம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள்  மட்டுமின்றி அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி  விடுதி கேன்டீன்கள், திரையரங்க கேன்டீன்கள்,  அரசு நியாய விலை கடைகள் ,சத்துணவு, அங்கன்வாடி மற்றும் அன்னதான மையங்கள் என உணவுப் பொருள் சார்ந்த தொழில் செய்பவர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் உரிமம் மற்றும் பதிவு  பெற்றே வணிகம் புரிய வேண்டும் என்பது கட்டாயமாகும். கொரோனாவுக்கு பின் சில உணவு வணிகர்கள் புதுப்பிக்காமலும், புதியதாக கடைகள் வைத்துள்ளவர்கள், நடமாடும் உணவு வணிகர்கள் இது குறித்து உரிய விவரம் தெரியாததால் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு பெறவோ புதுப்பிக்காமலும் இருக்கிறார்கள். 

மாவட்ட ஆட்சியரும் இதுகுறித்து விழிப்புணர்வு நடத்த வலியுறுத்தியதன் பேரில் ஒன்றியம் வாரியாக உணவு பாதுகாப்பு துறை சார்பாக முகாம்கள் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் பாலக்கோட்டில்   உணவு வணிகர்கள்  விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் முகாம் நடைபெற்றது.


முகாமில் தலைமையேற்று மாவட்ட நியமனஅலுவலர் டாக்டர். பானுசுஜாதா, அவர்கள் பேசுகையில், தருமபுரி மாவட்டத்தில் அனைத்து உணவு வணிகர்களும் உரிய உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று அதை தங்கள் நிறுவனங்களின் நிலையங்களில் கடைகளில் நுகர்வோர் காணும் வகையில் மாட்டி வைக்க வேண்டும். மேலும் முறையாக காலாவதி தினத்திற்கு முப்பது தினங்களுக்கு முன்பாக புதுப்பித்து  கொள்ளுதல் அவசியம் என தெரிவித்துடன், தாங்கள் விற்பனை செய்யும் உணவுப் பொருட்களை உரிய லேபிள் நடைமுறை பின்பற்றவும்  உரிய விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளதா என கண்காணித்து காலாவதி தேதிக்கு முன்பாக  அவற்றை அகற்றி விடுதல் அவசியம்  என்பதுடன்  தன் சுத்தம், சுற்றுப்புற சுகாதாரம் மேம்பட இருத்தல் அவசியம் என தெரிவித்துக் கொண்டார்.


காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்கள் ,உணவு வணிகர்கள் உரிமம் மற்றும் பதிவை உணவு பாதுகாப்பு அலுவலர் வழிகாட்டுதல்  மூலமாகவோ அல்லது தாங்களாகவே  https://foscos.fssai.gov.in என்ற இணையதள முகவரியில் தாங்களாகவோ உரிய சான்றுகளை பதிவேற்றி உரிய கட்டணத்துடன்  விண்ணப்பித்துக் கொள்ளலாம், மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்  மூலம் உரிய ஆய்வுக்கு பின், தங்களுக்கு தாங்கள் இணையதளத்தில்   குறிப்பிட்ட இணையதளம் முகவரியில் உணவு பாதுகாப்பு உரிம சான்றிதழ்கள்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்பதை எடுத்துரைத்தார். மேலும் உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் , மறு பொட்டலம் எடுப்பவர்கள் குடிநீர் குளிர்பான சமையல் எண்ணெய் பால் பொருள் தயாரிப்பாளர்கள்  மற்றும் மறு  பொட்டலம் அதாவது ரீ பேக்கிங் செய்யும் உரிமம் பெற்றவர்கள்  ஆண்டுக்கு ஒரு முறை (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரையிலான) தங்கள் வணிக விற்பனை விவரத்தை  ஆன்லைன் முறையில் மே 31க்குள், தற்போது ஜூன் 30 வரை கால அவகாசம் தரப்பட்டிருந்தது. தாக்கல் செய்ய தவறி இருந்தால் உடன் தாக்கல் செய்ய விழிப்புணர்வு செய்யப்பட்டது. 


விவரம் அறிய தங்கள் பகுதி உணவு பாதுகாப்பு அலுவலரையோ, ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட நியமன அலுவலர் அலுவலகத்தையோ அணுகி உரிய  வழிகாட்டல் படி தாக்கல் செய்ய வலியுறுத்தினார். இல்லையெனில் ஜூலை 1 முதல் நாள் ஒன்றுக்கு நூறு வீதம்  தாக்கல் செய்யும் தேதி வரையில் அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது. எனவே உடனடியாக தயாரிப்பு மற்றும் மறு பொட்டலமிடும் உரிமம் பெற்றவர்கள் தாக்கல் செய்து கொள்ள வலியுறுத்தினார்.


வணிகர் சங்க தலைவர்  திரு.முத்து அவர்கள் தன் பேச்சில், அரசால் செயல்படுத்தப்படும் வணிகர் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்ள தேவையான ஆவணங்களில் உணவு சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு உணவு பாதுகாப்பு சான்றிதழ் ஆவணம் அவசியம் எனவே பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள், நடைபாதை கடைகள் உட்பட அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற்று சங்கத்தை அணுகினால் இவர்கள் நல வாரியத்தில் இணைத்து அவர்களுக்கு நல வாரிய உதவிகள் உரிய தேதியில் இழப்பீடு ஏற்படும் போது தக்க உதவியாக இருக்கும் என வலியுறுத்தி பேசினார்.


வணிகர் சங்க ஒருங்கிணைப்பாளர் ராஜாமணி மளிகை திரு.சரவணன் தன் உரையில் அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற்றிட வணிகர் சங்கம் உரிய நடவடிக்கை எடுத்து ஒத்துழைப்பு நல்கும் என தெரிவித்துக் கொண்டார். இன்றைய முகாமில் 50க்கும் மேற்பட்ட உரிமம் மற்றும் பதிவு சான்றிதழ் பெற புதிய மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 


இவை உரிய முறையில்  பதிவேற்றப்பட்டு, உரிய ஆய்வுக்கு பின் அவர்களுக்கு குறித்த இணையதளம் முகவரியிலோ அல்லது பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என முகாமில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வணிகர் சங்க பொருளாளர் திரு.மாணிக்கம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad