தருமபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்திற்கான வைப்பு தொகை இரசீதுகளை 72 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்திற்கான வைப்பு தொகை இரசீதுகளை 72 பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (08.08.2023) மாவட்ட ஆட்சியரகத்தில் வழங்கினார்கள்.
மாண்புமிகு முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டம் இரண்டு பெண்குழந்தைகளுடன் அல்லது ஒருபெண் குழந்தையுடன் அல்லது முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையும் இரண்டாவது பிரசவத்தில் 2 பெண் குழந்தையும் பிறந்து பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட குடும்பங்களுக்கு ஒரு பெண் குழந்தைக்கு தலா ரூ.25000 வீதமும், ஒரே பெண் குழந்தையெனில் ரூ.50000 எனவும் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் வைப்புத்தொகை இரசீது வழங்கப்பட்டு, குழந்தைகளுக்கு 18 வயது முடிந்தவுடன் முதிர்வுத்தொகை பெற்றுக்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்மூலம் பெண் சிசுக்கொலை தடுக்கப்படுகிறது, பெண் கல்வி ஊக்குவிக்கப்படுகிறது, குழந்தைத்திருமணம் தடுக்கப்படுகிறது. அதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், 2023-2024 ஆம் நிதியாண்டில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த 72 பயனாளிகளுக்கு இணையவழியில் ஒப்புதல் வழங்கப்பட்டு, விண்ணப்பம் ஏற்பு செய்யப்பட்டு தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பியதற்கான செயல்முறை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் செவ்வாய்கிழமை அன்று மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் விண்ணப்பித்து வைப்புத்தொகை இரசீதுகள் கிடைக்கபெறாமல் உள்ள பயனாளிகள் மற்றும் 18 வயது பூர்த்தியடைந்தும் முதிர்வு தொகை கிடைக்க பெறாமல் உள்ள பயனாளிகள் ஆகியோர் உரிய சான்றுகளோடு ஆஜராகி பயனடைந்தனர். இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக