தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், ஜெர்தலாவ் எண்டப்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு நீடித்து நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்மணி அவர்கள் தலைமை வகுத்து கருமை விவசாயிகள் நீடித்து நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பத்தை கடைப்பிடித்து உற்பத்தியை பெருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அங்கக வேளாண், சிறுதானிய ஆண்டு ஆகியன குறித்து எடுத்துரைத்தார்.
பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக வெண்ணிலா தலைவர் மற்றும் பேராசிரியர் கலந்துகொண்டு தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக கரும்பில் வேர்புழுவின் தாக்குதல் காணப்படுகிறது. இது மருதாம்பு கரும்பில் அதிகம் இருக்கும் இதனை கட்டுப்படுத்த பேவேரியா பேசியனா அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலே, லெக்கானி சிலியம் போன்றவற்றை ஒரு கிலோ பூஞ்சாண உயிர் கொல்லிக்கு 100 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து, நிழலில் வைத்து இரண்டு மூன்று தினங்களுக்கு பிறகு வயலில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும், வளர்ந்த கரும்பு பயிரில் இதனை கட்டுப்படுத்த, பாதிக்கப்பட்ட பயிரினை நீக்க வேண்டும், பயிர் சுழற்சி செய்வதன் மூலம் இதனை கட்டுபடுத்தலாம் எனக் கூறினார்.
கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், நீடித்த நிலையான கரும்பு சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் நாற்றங்காலில் தரமான நாற்று உற்பத்தி, கரும்பு சாகுபடி தொழில் நுட்பங்கள், பராமரிப்பு மேலாண்மை ஆகியன குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை அலுவலர் மணிவண்ணன் துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
உழவன் செயலி மற்றும் அதன் பயன்கள், மண் பரிசோதனை குறித்து தேவி, வேளாண் அலுவலர், உழவர் பயிற்சி நிலையம், தருமபுரி அவர்கள் விவசாயிகளுக்கு கூறினார். பயிற்சியில் கரும்பு அலுவலர்கள், கரும்பு உதவியாளர் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக