தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (11.08.2023) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதிலிருந்தும் கலந்து கொண்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.
போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்திடவும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகப்படுத்திடவும், போதைப் பொருட்கள் எந்த வடிவில் வந்தாலும் அதை அடியோடு ஒழிக்க தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் போதை ஒழிப்பு தொடர்பான தொடர்ச்சியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காவல்துறை சார்பில் 11.08.2022 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” தொடக்க விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்கப்பட்டது.
மேலும், போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆகியவற்றை இணைத்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள “அமலாக்கப் பணியகம் - குற்றப் புலணாய்வு துறை” என்ற புதிய பிரிவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” விழாவில், நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உறுதிமொழி
"போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன்.”
அதனைத் தொடர்ந்து அமலாக்கப் குற்றப்புலனாய்வு துறையினால் தயாரிக்கப்பட்டுள்ள போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார குறும்படத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார். போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் இவ்விழிப்புணர்வு குறும்படம் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படும். மேலும், போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு மாணவர்களை எளிதாக சென்றடைய அவர்களை கவரும் வகையில் பாடல் காணொலியும் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு வழக்குகளில் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 13,000 கிலோ கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இன்று அழிக்கப்பட்டது. “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கிடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் 20,000 -க்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான மாணவர் குழுக்களும் (Anti-Drug Clubs), நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் (NSS), தேசிய மாணவர் படை (NCC) மற்றும் இதர மாணவர்கள் இயக்கங்களின் மூலம் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடர்ச்சியாக மேற்கொள்ள சிறப்பு தன்னார்வலர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப் பொருட்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகளின் காரணமாக 2022 மற்றும் 2023 ஆண்டுகளில் 22,447 குற்றவாளிகளுக்கு எதிராக 16,023 வழக்குகள் பதியப்பட்டு 42,337 கிலோ கஞ்சா, 1.234 கிலோ ஹெராயின், 74,412 போதை மாத்திரைகள் மற்றும் 223 கிலோ பிற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், போதைப் பொருள் தடுப்பு சட்டப்பிரிவு வழக்குகளில், குற்றவாளிகள் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களின் பெயரிலுள்ள சொத்துக்களை கையகப்படுத்தும் தொடர் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் ரூ.18.15 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின்போது, நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
முன்னதாக தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் இருந்து போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் இன்று (11.08.2023) கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். இப்பேரணியானது தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முடிவடைந்தது. இவ்விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்க்கு எதிரான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி 300-க்கு மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், கல்லூரி கல்வி இணை இயக்குநர் திருமதி நா.இராமலட்சுமி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. குணசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக