இது குறித்து பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் M.அருள்மணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பசுமை தமிழ்நாடு இயக்கம் தமிழ்நாட்டின் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையினை உருவாக்குவதற்கும் பசுமை தமிழ்நாடு இயக்கம் என்ற திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு வேளாண்மைத் துறை மற்றும் வனத்துறை மூலமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்தினால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன் விவசாய நிலங்களின் மண் வளமும் அதிகரிப்பதோடல்லாமல் மாநிலத்தின் பசுமைப் பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் தேக்கு, மலை வேம்பு,குமிழ் தேக்கு,புலியன்,சிசு, கொய்யா,உள்பட பல்வேறு தரமான மரக்கன்றுகள் தமிழ்நாடு அரசு வனத்துறையின் மூலம் மங்கலபட்டி கிராமத்தில் உள்ள நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தயாராக உள்ளன.
விவசாயிகள் மரக்கன்றுகளை பெறுவதற்காக உழவன் செயலியில் பதிவு செய்து வேளாண்மைத் துறையின் பாிந்துரையின் படி தேவையான மரக்கன்றுகளை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். மரக்கன்றுகள் வினியோகம் வரப்பு நடவு முறை எனில் ஏக்கருக்கு 60 மரக்கன்றுகளும், விவசாய நிலங்களில் தனியாக நடவு செய்ய ஏக்கருக்கு 200 மரக்கன்றுகளும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விருப்பமுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து பயன்பெறலாம். சிறுகுறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
உழவன் செயலி மூலமாக தேவையான மரக்கன்றுகளை விவசாயிகள் பதிவு செய்து பெற்று கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிர் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் பாதிப்படையாமல் கூடுதலாக ஊடு பயிராக மரங்களை வளர்த்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக