இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் தர்மபுரி மாவட்டம் மற்றும் தர்மபுரி, நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம், மொரப்பூர் மற்றும் கடத்தூர் ஆகிய 7 வட்டார கிளைகள் தொடக்க விழா மற்றும் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா தர்மபுரி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவிற்கு மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் கண்ணன் முன்னிலை வகிக்க, மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பதிவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.
தர்மபுரி மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்ற, தருமபுரி மாவட்ட செயலாளர் சசிகுமார் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, மாநில துணைத்தலைவர் ஞானசேகரன் மற்றும் மாநில துணை செயலாளர் வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட பொருளாளர் பழனிச்சாமி நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர்கள் நாகராஜன், சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் ராஜீவ் காந்தி, ரஞ்சித் மாவட்ட மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர்கள் சிவமலர், அனிதா, மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், 7 வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
01.06.2009 முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூபாய் 8370 எனவும், 01.06.2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய் 5200 அடிப்படை ஊதியம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு ஊதிய குழுவிலும் ஒரே பதவி, ஒரே கல்வி தகுதி, ஒரே பணி என்று அனைத்தும் ஒரே மாதிரியாக இருந்தும் இரு வேறு ஊதியங்கள் நிர்ணயித்ததில்லை.
கடந்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போராட்டங்களில் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் அவர்கள் கலந்து கொண்டு ஆதரவளித்து, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்தார். அதனை அரசு விரைந்து செயல்படுத்தி 14 ஆண்டு காலமாக ஏற்பட்டுள்ள இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வேண்டும்.
அதன் மூலம் தமிழக கல்வி தரத்திற்கு அடித்தளமாக விளங்கும் இடைநிலை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும், கடந்த 5 ஆம் தேதி முதல் வரும் 27 ஆம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு செல்வது எனவும், செப்டம்பர் 28ஆம் தேதி முதல் பருவ விடுமுறையின் போது மாணவர் நலன் பாதிக்கப்படாமல் சென்னை டிபிஐ வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது எனவும், அதில் மாவட்டத்தின் சார்பாக அனைத்து ஆசிரிய பெருமக்களும் குடும்பத்தோடு கலந்து கொள்வது எனவும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கை வெல்லும் வரை மாநில இயக்கத்துடன் இணைந்து போராடுவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக