இதனை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் இன்று நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலை அரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (15.09.2023) குடும்பத் தலைவிகளுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமைவகித்தார்கள்.
இவ்விழாவில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள்.
மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கிடும் அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான இன்று (15.9.2023) தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமாகவும், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர் பயன்பெறும் வகையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கிடும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள்.
அதனை தொடர்ந்து தற்போது தருமபுரி மாவட்டத்தில் இவ்விழாவின் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி வருவாய் வட்டத்தை சார்ந்த 2000 மகளிருக்கு இன்றைய தினம் வங்கி பற்று அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 3,92,385 விண்ணப்பங்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெற்று பரிசீலிக்கப்பட்டு, தற்போது குடும்பதலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33% தனி இடஒதுக்கீட்டினை உருவாக்கி தந்தார்கள். அதன் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர் நலன் காக்கும் வகையிலும், வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையிலும் மகளிர் கட்டணமில்லாமல் நகரபேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் வண்ணம் விடியல் பயணம் திட்டத்தையும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை அறிவித்து, செயல்வடிவம் கொடுத்துள்ளார்கள். இத்திட்டங்களுக்கு மணிமகுடமாக விளங்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை இன்று செயல்படுத்தியுள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாமை தொடங்கி வைத்தார்கள். இதே தருமபுரி மாவட்டத்தில் தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக்குழுக்கள் துவங்கப்பட்டது.
தற்பொழுது தருமபுரி மாவட்டத்தில் 14,105 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,69,254 மகளிர் உறுப்பினர்களாக உள்ளனர். இம்மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் மூலம் கடந்த ஆண்டு 21,048 மகளிர் பயனடையும் வகையில் ரூபாய் 116.96 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
தருமபுரி மாவட்டத்தில் விடியல் பயணம் திட்டத்தின் கீழ், மொத்தம் 7.50 கோடி பேருந்து பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பான திட்டமாக செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற மகளிருக்கென பொருளாதார முன்னேற்றம் சார்ந்த திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவரும் இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) திருமதி.ஆர்.பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.டி.ஆர்.கீதாராணி (தருமபுரி), திரு.வில்சன் ராஜசேகர் (அரூர்), மாநில கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி. அ.ச. மாது சண்முகம், தடங்கம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கவிதா உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக