தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய சுயதொழில் கடன் திட்டங்களை மாவட்ட தொழில் மையம் மற்றும் பிற அரசு துறைகள் மூலமாக செயல்படுத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக புதிதாக வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க ஆர்வமுடைய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களுக்கு தேவையான கடன் வசதியினை வங்கிகள் மூலம் ஏற்படுத்தி தரும் வகையிலும் மாவட்ட அளவிலான வங்கிக்கடன் வழிகாட்டுதல் முகாம் இன்று நடைபெற்றது.
மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டம் போன்ற துறைகள் அனைத்து வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து, வங்கியின் மூலம் மானியத்துடன் கூடிய கடன்கள் பெற்று சுயமாக தொழில்கள் துவங்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
மேலும், இம்முகாமில் பல்வேறு தொழில் கடன் திட்டங்களின் கீழ் 24 பயனாளிகளுக்கு ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஒப்பளிப்பு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை 1639 பயனாளிகள் ரூ.111.5 கோடி தொழிற்கடன் உதவி பெற்றுள்ளனர்.
இம்முகாமில் சுயதொழில் கடன் திட்டங்கள், டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மாநில அரசின் மானியங்கள் (25% மூலதன மானியம், மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இம்முகாமில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பா.கார்த்திகை வாசன், நிதி ஆலோசகர் (FaMTN) திரு.ஜெ.வணங்காமுடி, தொழில் ஊக்குவிப்பு அலுவலர் திருமதி.பெ.வெங்கடேஸ்வரி, ரிசர்வ் வங்கி மேலாளர் திரு.கிருஷ்ணகுமார், தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கு.கண்ணன், MSME சங்கத் தலைவர்கள் திரு. இ.ரா.வெங்கடேஸ் பாபு (தருமபுரி), திரு.ஜெ.சரவணன் (கடகத்துார்), நெல் அரவை முகவர்கள் சங்க தலைவர் திரு.ப.பாஸ்கரன், வணிகர் சங்க தலைவர் திரு.சி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள், வங்கியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக