வருகின்ற 01.11.2023 உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 27 அக்டோபர், 2023

வருகின்ற 01.11.2023 உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் 01.11.2023 அன்று காலை 11.00 மணி அளவில் நடத்தப்படவுள்ளது. அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மேற்படி நாளில் கிராம சபை கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநர் நிலையிலும், இணை இயக்குநர் நிலையிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள், பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நவம்பர் 1 - உள்ளாட்சிகள் தினத்தன்று நடத்தப்பெற வேண்டிய கிராமச்சபை கூட்டங்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பொருள்கள் விவரம், நவம்பர் -1 உள்ளாட்சி தினமாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல், கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர்சுய உதவிக் குழுக்களை கௌரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், இதரப்பொருட்கள் ஏதேனும் இருப்பின் கிராம சபையின் ஒப்புதலுக்கு கொண்டு வரப்படலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad