பொய்யப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் 316 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 அக்டோபர், 2023

பொய்யப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் 316 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், பொய்யப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் 316 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், பொய்யப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (18.10.2023) நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 167 பயனாளிகளுக்கு ரூ.68.85 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், இணையவழி பட்டாக்கள், நத்தம் பட்டா மாறுதல் ஆணைகளையும், 87 பயனாளிகளுக்கு ரூ.16.49 இலட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி, முதியோர், முதிர்கண்ணி, ஆதரவற்ற விதவை, திருமணம், இயற்கை மரணம் உள்ளிட்ட உதவித்தொகைகள் மற்றும் விபத்து இழப்பீட்டுதொகைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 12 பயனாளிகளுக்கு ரூ.5.75 இலட்சம் மதிப்பீட்டில் விதைகள், உயிரி உரங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.1.35 இலட்சம் மதிப்பீட்டில் பசுமை குடில், குழத்தட்டு நாற்றுகள், நுண்ணீர் பாசனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 46 பயனாளிகளுக்கு ரூ.38.49 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உதவிகள் என மொத்தம் 316 பயனாளிகளுக்கு ரூ. 1.31 கோடி (ரூ.1,30,91,965/-) மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை, பன்னாரி சர்க்கரை ஆலை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியவர்களுக்கும், பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை உள்வட்டம், பொய்யப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இக்கிராமத்தில் மொத்தம் 5,700-க்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். இக்கிராமத்திற்கு அங்கன்வாடி மையம், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. இக்கிராமமானது 4 குக்கிராமங்களை உள்ளடக்கியது. இப்பகுதி மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் இப்பகுதியில் நடைபெறுகின்றது.



மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், சமூகநலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, வேளாண்மை - உழவர் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மாவட்ட தொழில்மையம் உள்ளிட்ட துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். எனவே பொதுமக்களாகிய நீங்கள் அரசால் செயல்படுத்தப்படக்கூடிய கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம் மற்றும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக தெரிந்துகொண்டு, தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.


இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் 111 கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த 109 மனுக்கள் ஏற்கப்பட்டு இன்றைய தினம் 316 பயனாளிகளுக்கு ரூபாய் 1.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.


மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,  அவர்கள் தெரிவித்தார்கள். 


இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், அரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வே.சம்பத்குமார், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி ம. யசோதா, அரூர் வருவாய் கோட்ட அலுவலர் திரு.வில்சன் ராஜசேகர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் (அரூர்) திருமதி சரளா சண்முகம், அரூர் ஒன்றியக் குழு தலைவர் திருமதி பொன்மலர் பசுபதி, துணைத்தலைவர் திரு. ஜி.அருண், தீர்த்தமலை ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி ஆர்.புஷ்பலதா, தீர்த்தமலை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி ச.கலைவாணி, துணைத்தலைவர் திருமதி எம்.தமயந்தி, அரூர் வட்டாட்சியர் திரு.ஏ.பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad