காந்தி ஜெயந்தி முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (02.10.2023) நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சியில் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையாளராக கலந்துகொண்டார்கள்.
இக்கிராம சபைக்கூட்டத்தில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அவர்கள் கலந்துகொண்டார்கள். இக்கிராம சபைக்கூட்டத்தில், 01.04.2023 முதல் 30.09.2023 உட்பட்ட காலத்திற்கான பாலஜங்கமனஅள்ளி கிராம ஊராட்சியின் நிர்வாகத்தின் பொதுசெலவினங்கள், வரவு செலவு விவரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்ட பணிகளின் விவரம் ஆகியவை குறித்த விரிவான அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. மேலும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், 2023-24 ஆம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தினை பொதுமக்களுக்கு அறிவித்தல், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் இக்கிராம சபைக்கூட்டத்தில் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு, மக்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டது.
இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: காந்தி ஜெயந்தி முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று நடைபெறுகின்றது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சியில் நடைபெறுகின்ற இக்கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், இருப்பிடங்களை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தேங்குகின்ற நீரினால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் வீடுகளையும், சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்து கொள்வதோடு, நீர் தேங்காமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். தேங்காய் சரடுகள், தேங்காய் மட்டைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பழைய டயர்கள் போன்ற மழைநீர் தேங்க்கூடிய அனைத்து பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்திட வேண்டும்.
மழைக்காலங்களில் குழந்தைகளை ஏரிகள், குளம், குட்டைகள், கிணறுகள் உள்ளிட்ட நீர் நிரம்பிய பகுதிகளில் இறங்குவதற்கோ, குளிப்பதற்கோ அல்லது அதன் அருகில் விளையாடுவதற்கோ முற்றிலும் அனுமதிக்க்கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மழைக்காலங்களில் பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக தருமபுரி மாவட்டம் உருவாகுவதற்கு பிளாஸ்டிக் பயன்பாட்டை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை செய்யும் பயனாளிகளும் பணிகளை மிகச்சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அத்தியாவசிய தேவைகளான பொது சுகாதார வளாகம், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், தெருவிளக்கு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்த ஊராட்சியில் தேவை என கூறப்பட்டுள்ள சாலை வசதிகளும், தெரு விளக்கு வசதிகளும், பொது சுகாதார வளாகமும் அமைத்து கொடுக்க சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பள்ளிக்கு கூடுதல் கட்டடங்கள், அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடங்கள், நூலகம் பழுது பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய ஆய்வு மேற்கொண்டு தகுதியான திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன் கொட்டாயில் ரூ.9.6 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுய உதவி குழு பணிக்கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் திறந்து வைத்தார்கள். இக்கிராம சபைக்கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.எம்.கோவிந்தசாமி, துணை தலைவர் திரு.சி.கோவிந்தராஜ், நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ஆறுமுகம் உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள், இதர உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக