தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.2000 வழங்க வேண்டும்,கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், புதுச்சேரி மாநிலம் போல் தீபாவளி போனஸ் ரூ.5000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய நாட்டின் முதல் தொழிற்சங்கமான ஏஐடியூசின் 104 வது அமைப்பு தினமான நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில் முதலமைச்சருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக பாப்பாரப்பட்டி 3 ரோடு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சுதர்சனன் தலைமை தாங்கினார்.மாவட்ட துணை தலைவர் ஏ.முருகேசன் முன்னிலை வகித்தார்.
இதில் ஏஐடியூசி மாநில தலைவர் எஸ் எஸ் காசி விஸ்வநாதன்,மாநில துணைத்தலைவர் கே.மணி,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் எம்.மாதேஸ்வரன் ஆகியோர் பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் நடிகர் சிங்காரவேலு,தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் எம்.ராஜி, பழனி,காளியப்பன் உள்பட ஆண்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிறைவாக தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.சிவன் நன்றி கூறினார். முன்னதாக பாப்பாரப்பட்டி-தர்மபுரி மெயின் ரோட்டில் உள்ள சங்க அலுவலகம் முன்பிருந்து மூன்று ரோடு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம் வரை தமிழ்நாடு ஏஐடியூசி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலமாக வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக