தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேமிப்பின் அவசியம் மற்றும் கட்டமைப்புகளை பராமரித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கி.சாந்தி, இஆப., அவர்கள் கொடியசைத்து, தொடங்கி வைத்தார்கள்.
மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அதிநவீன மின்னணு காணொளி வாகனம் மூலம் ஒளிபரப்பபட்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறும்படத்தினை பார்வையிட்டார்கள். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேமிப்பின் அவசியம் மற்றும் கட்டமைப்புகளை பராமரித்து மழைநீரை சேமிக்கும் விதத்தை அனைத்து பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்களுடனான பாதகைகள் மற்றும் துண்டு பிரச்சாரங்களுடன் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர்.
இப்பேரணியானது இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி தருமபுரி-சேலம் பிரதான சாலைவழியாக செந்தில் நகர், பாரதிபுரம் வரை சென்று மீண்டும் இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குப்படி தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் மழைநீரின் சேகரிப்பு அவசியம் குறித்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 நாட்களுக்கு தருமபுரி மாவட்டத்தில் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பபடுகிறது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து மழைநீரை சேகரிப்பதன் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்த்தல், கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள் மற்றும் பழைமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை தூர்வாரி மழைநீரை சேகரித்தல், மேலும், திறந்தவெளி கிணறு மூலம் மழைநீரை சேகரித்தல் குறித்த விழிப்புணர்வு குறும்படங்கள் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் ஒளிபரப்பப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் திரு.லோகநாதன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.வெ.லோகநாதன், உதவி நிர்வாக பொறியாளர் திரு.இராகோத்சிங், துணை நிலநீர் வள்ளுநர் திருமதி.மணிமேகலை, உதவி நிலநீர் வள்ளுநர் திருமதி.ராதிகா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக