ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 அக்டோபர், 2023

ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட வேண்டும் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை இன்று தொடங்கி வைத்து தகவல்.

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு கதர் கிராமத் தொழில்கள்-காதி கிராஃப்ட், செய்தி மக்கள் தொடர்புத் துறை ஆகிய துறைகளின் சார்பில் தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி, தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை இன்று (02.10.2023) தொடங்கி வைத்தார்கள்.


பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்பிள்ளை அவர்கள் ”கதர் ஏழைகள் நூற்றது, எளியவர் நெய்தது, கூழும் இல்லாதவர் குறை பல தீர்ப்பது” என தெரிவித்துள்ளார்கள். கதர் விற்பனையை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த ஆண்டு (2023) தீபாவளி சிறப்பு கதர் விற்பனைக்கென கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீதம், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீதமும் சிறப்பு தள்ளுபடி அனுமதிக்கப்பட்டுள்ளது. 


கதர் விற்பனைக்கு GST வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு (2022) தருமபுரி மாவட்டத்தில் ரூ. 50.00 இலட்சத்திற்கு கதர், பட்டு, பாலியஸ்டர் ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு கதர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு (2023) தீபாவளி சிறப்பு விற்பனை குறியீடாக தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.90.00 இலட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தால் தயாரிக்கப்படும் மென்மையான கதர், கண்கவர் பட்டு மற்றும் வண்ண பாலியஸ்டர் போன்ற உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன், வாடிக்கையாளர்களின் தேவையினை முழு அளவில் பூர்த்தி செய்திடும் நோக்கத்துடன் கதர் கிராம உற்பத்திப் பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


இந்த ஆண்டு (2023) தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் தற்காலிக கதர் விற்பனை நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. மேலும், கதர் விற்பனை தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் வசதிக்காக 10 சம தவணைகளில் கதர் கடன் முறையில் விற்பனை செய்திடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.


எனவே பொது மக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் இந்த தீபாவளி சிறப்பு விற்பனை காலத்தில், அரசு தள்ளுபடி மற்றும் GST வரி விலக்கினை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்கள் மற்றும் கிராமப்பொருட்களை வாங்கி பயனடையுமாறும், தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொருவரும் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஏழை கதர் நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட உதவிட வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், தருமபுரி காதி கிராஃப்ட் விற்பனை அங்காடி மேலாளர் திரு.ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad