இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நரசிம்மன், மாவட்ட பொருளாளர் ஸ்டாலின் மணிகுமார், துணைத் தலைவர்கள் துரைராஜ், விநாயகம், இணை செயலாளர் உஷாராணி, மாநில இணை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 4350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், சுமார் 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் ஆக 4500 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. கிராமப்புற மக்கள், விவசாயிகள் ஆகியோரின் கடன் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் விவசாய கடன், ஆடு மாடு வளர்ப்புக்கான கடன், நகை கடன், சிறு வணிக கடன், உடல் ஊனமுற்றோருக்கான கடன் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான கடன் என பல்வேறு கடன்களை வழங்கி கிராமப்புற மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றன.
இந்நிலையில் அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு உண்டான தொகையை அரசு இதுவரை முழுமையாக திருப்பித் தரவில்லை. இதனால் சங்கங்களுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு வைப்புதாரர்களுக்கு, வைப்புகளை திருப்பி கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தை கூட்டுறவு சங்கங்கள் செயல்படுத்தி வருகிறது. தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் சுமார் 27 ஆயிரம் நியாயவிலை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்ளும் விற்பனையாளர்கள், கட்டுனர்களுக்கு மாத ஊதியம் சங்கத்திலிருந்து வழங்கப்படுவதுடன், அங்காடிகளுக்கு உரிய கடை வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட பிற செலவினங்களையும், இதற்காக பெறப்பட்டுள்ள காசுகடனுக்கு வட்டியும் செலுத்தி வருகின்றன. இந்த செலவு தொகைகள் யாவும் ஓரிரு ஆண்டுகளுக்கு பின்னரே அரசிடம் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. வழங்கப்படும் தொகையும் செலவினங்களை முழுமையாக ஈடு கட்டக் கூடியதாக இருப்பதில்லை. இதனால் பொது விநியோக திட்டத்தால் சங்கங்கள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகிறது.
கிராமப்புறங்களில் விவசாய காரியங்களுக்கு தேவையான உரம் மற்றும் நுண்ணூட்ட பொருட்கள் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் பெற்று விநியோகிக்கப்படுகிறது. இதற்கென வழங்கப்படும் விற்பனை கழிவு ஏறத்தாழ 25 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்து வருவதால், இதற்கான காசுகடனுக்கு செலுத்தப்படும் வட்டி, இறக்கு கூலி உள்ளிட்ட செலவினங்களை கூட ஈடுகட்ட முடிவதில்லை. இதனால் சங்கங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள சங்கங்களுக்கு சுமார் 18000 பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் தற்பொழுது சுமார் 7000 பணியாளர்களே பணிபுரிந்து வருகின்றனர். பல சங்கங்களுக்கு தகுதியான செயலாளர்கள் இல்லாமலும், ஒரு செயலாளரே இரண்டு சங்கங்களை கவனிக்கும் நிலையும் இருந்து வருகிறது.
இவ்வாறான நிலையில் தற்போது பல்நோக்கு சேவை மையம், விவசாய உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் சங்கங்கள் தங்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ ட்ராக்டர், நெற்கதிர் அறுக்கும் இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம், பறக்கும் மருந்து தெளிப்பான் (ட்ரோன்), லாரிகள், சிறு சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கட்டாயம் வாங்க வேண்டும் என கூட்டுறவுத்துறை அதிகாரிகள் வற்புறுத்தி வாங்க வைக்கின்றனர். அதேபோன்று சங்க வளாகத்தில் தேவை இருக்கிறதோ இல்லையோ கிடங்குகளை கட்டியே ஆக வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறது.
ஆரம்ப கட்டத்தில் லாபத்தில் உள்ள சங்கங்கள் மட்டும் இவ்வாறான பணிகளை செய்தால் போதும் என்று தெரிவித்தனர். தற்பொழுது நட்டத்தில் செயல்படும் சங்கங்களும் ஏதாவது ஒரு பணியினை மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறது. சுமார் 1000 கோடி அளவில் முதலீடு செய்யப்பட வேண்டிய இத்திட்டத்திற்கு இதுவரை எவ்வித அரசாணையோ, பதிவாளர் சுற்றறிக்கையோ பிறப்பிக்கப்படவில்லை.
இத்திட்டத்தினை அனைத்து சங்கங்களும் லாப நட்டத்தை கணக்கில் கொள்ளாமலும், தேவை, தேவையின்மையை கருத்தில் கொள்ளாமலும் சங்க செயலாளர்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி திட்டத்தை கண்மூடித்தனமாக செயல்படுத்த கூட்டுறவு துறை முனைந்து உள்ளதை கைவிடக் கோரி கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி அனைத்து பணியாளர்களும் ஒன்று திரண்டு இணைப்பதிவாளரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
இதில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் நேற்று, கொள்முதல் செய்யப்பட்டுள்ள கருவிகளை மண்டல இணைப்பதிவாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு தொடர் விடுப்பில் அனைத்து பணியாளர்களும் சென்றனர். இதன் தொடர்ச்சியாக இந்த திட்டம் கைவிடப்படும் வரை அல்லது முழுமையாக ஒழுங்குபடுத்தப்படும் வரை அனைத்து பணியாளர்களும் பணிக்கு திரும்புவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த போராட்டத்தினால் விவசாய கடன் வழங்கும் பணி, நகைக்கடன் வழங்கும் பணி, உரம் பூச்சி மருந்து விநியோகம் என அனைத்து பணிகளும் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது.
- க.மோகன்தாஸ், தர்மபுரி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக