சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 26 அக்டோபர், 2023

சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டாரம், ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (26.10.2023) நடைபெற்றது.


பின்னர், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: கர்ப்பிணி தாய்மார்கள் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அனைவரையும் வரவழைத்து சமமாக அமரவைத்து இதுபோன்று சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி இன்று நல்லம்பள்ளியில் நடத்தப்படுகின்றது. 


சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு மாவட்டத்திலும் வட்டார அளவில் நடத்தப்படுகிறது. கர்ப்பிணி தாய்மார்கள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திட வேண்டும். நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் உங்கள் கருவில் வளரும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பார்கள். கர்ப்ப காலத்தில் மருத்துவமனைக்கு சென்று உரிய பரிசோதனைகளையும், மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள் போன்றவற்றை குறிப்பிட்ட கால அளவிற்குள் கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகள் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியமாக இருக்கும். 


பெண்கள் வளர்இளம் காலத்தில் இருந்தே ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டும். மேலும் தங்கள் பகுதியில் கிடைக்ககூடிய காய்கறிகளையும், நெல்லி, கொய்யா போன்ற பழ வகைகளையும், சிறுதானியங்களான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவற்றையும் உணவில் சேர்த்து, ஊட்டச்சத்து பெற்று, தங்கள் ஆரோக்கியத்தையும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தையும் பராமரிக்க வேண்டும். மேலும், அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்தல், உரிய காலத்தில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளுதல், மருத்துவர்கள் பரிந்துரைக்ககூடிய கர்ப்ப கால பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுதல், ஊட்டச்சத்து உணவினை உட்கொள்ளுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும்.


தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு எந்த அளவிற்கு தாய்ப்பால் கொடுக்கப்படுகின்றதோ அக்குழந்தையின் ஆரோக்கியம், உடல் வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அனைத்தும் அக்குழந்தைக்கு முழுமையாக கிடைக்கும். இதனை கருத்தில் கொண்டு தாய்மார்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.


தருமபுரி மாவட்டத்தை பொறுத்தவரையில் இளம்வயது திருமணம் மற்றும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் நிலை நிலவி வருகின்றது. இதனால் பெண்களின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, பல்வேறு பிரச்சனைகளும் ஏற்படுகின்ற நிலை உருவாகின்றது. ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ இரண்டு குழந்தைகள் மட்டும் போதும் என்ற மனநிலையை உருவாக்கி கொள்ள வேண்டும். சிறிய குடும்பமே சிறப்பான வளர்ச்சி பெறும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கர்ப்பிணி தாய்மார்கள் இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் மூலம் மருத்துவர்கள் மற்றும் பலத்தரப்பட்ட துறை அலுவலர்கள் கூறிய விழிப்புணர்வு கருத்துகளை மனதில் பதிவுசெய்து பின்பற்றுவதோடு, இதுகுறித்து தங்களது கிராமப்புற பகுதி பெண்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இச்சமுதாய வளைகாப்பில் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை பாக்கு, மலர்மாலை, பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் அனைவருக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.எஸ்.பவித்ரா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி. மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் திருமதி. மாது சண்முகம், நல்லம்பள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.த.புவனேஸ்வரி மூர்த்தி, நல்லம்பள்ளி வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி. இரா.ஜெயந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு,லோகநாதன், ஆறுமுகம், வட்டார மருத்துவ அலுவலர் திரு.கே.வாசுதேவன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கர்ப்பிணி தாய்மார்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad