ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். - மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 20 அக்டோபர், 2023

ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். - மாவட்ட ஆட்சியர்.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் கிராம ஊராட்சி நிர்வாகம் குறித்த வழிகாட்டுதல்கள், தெளிவுரைகள் தொடர்பாக அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (20.10.2023) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சி நிர்வாகக் கட்டமைப்பின் செயல்பாடுகளை சரியான வகையில் வழி நடத்தவும், கிராம ஊராட்சியால் அளிக்கப்பட வேண்டிய சேவைகள், நிறைவேற்ற வேண்டிய கட்டாயக் கடமைகள், விருப்பக் கடமைகள் ஆகியவற்றைச் சிறப்பான முறையில் செயல்படுத்திடவும், நடப்பில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவதில் எழும் ஐய்யப்பாடுகளை தெளிவுப்படுத்திடவும் காலாண்டுக்கு ஒருமுறை ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டு, இக்கூட்டம் நடைபெற்று வருகிறது.


தற்போது கிராம ஊராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்படும் இணையவழி வரி வசூல், இணையவழி மனைப் பிரிவு ஒப்புதல் வழங்குதல், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் போன்ற முக்கியத் திட்டங்கள் தொடர்பான நடைமுறைகளைத் தெளிவுப்படுத்தி, அன்றாட நிர்வாகத்தை எளிய முறையில் எடுத்துச் செல்ல அரசின் முனைப்பு முயற்சிகளுக்கு ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை தங்களது ஊராட்சிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் பூர்த்தி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய டிஜிட்டல் சூழலில் இணையதள சேவைகளைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக போதுமான விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் அந்தந்த ஊராட்சிப் பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்திட வேண்டும். மேலும், கிராம சாலை மேம்பாட்டுத்திட்டம், ஜல் ஜீவன் இயக்கம் போன்ற திட்டங்களையும் முழுமையான பயன்படுத்திக் கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.


குறிப்பாக, தங்களது பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரித்து, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு நாள்தோறும் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா என்பது குறித்தும், குளோரினேசன் செய்யப்படுவதையும், குடிநீர் தரப்பரிசோதனை செய்வது குறித்த பயிற்சியினையும் வழங்க வேண்டும். மேலும், மேல்நிலை நீர்தேக்கதொட்டி மின்மோட்டார் பழுது ஏற்பட்டால் உடனடியாக பழுது நீக்குதற்கும், ஜல் ஜுவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.


சுகாதாரத்தை பேணும் வகையில், பொதுக் கழிப்பிடங்களைச் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தங்களது ஊராட்சிகளில் தேங்கும் குப்பைகளை நாள்தோறும் அப்புறப்படுத்தி சுத்தம் செய்து, சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் வேண்டும். பழுதடையும் தெரு விளக்குகள் உடனடியாக சரி செய்யப்படுகிறதா என்பது குறித்தும் ஊராட்சிமன்றத் தலைவர்கள் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு உறுதிசெய்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அனைத்து செயல்பாடுகளிலும் சிறந்த ஊராட்சியாக தங்களது ஊராட்சிகள் அமைவதற்கு ஊராட்சிமன்றத் தலைவர்கள் முனைப்போடு செயல்பட வேண்டும். அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு எவ்விதப் பாகுபாடுமின்றி சமமாகக் கிடைத்திடுவதை தொடர்புடைய ஊராட்சிமன்றத் தலைவர்கள் உறுதி செய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து, ஊராட்சிமன்றத் தலைவர்கள் தங்களது ஊராட்சிகளில் உள்ள அடிப்படைக் கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி மாலா உள்ளிட்ட தொடர்புடைய அரசுத் துறை அலுவலர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad