தருமபுரி மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.699.17 கோடி மதிப்பீட்டிலான புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 22 நவம்பர், 2023

தருமபுரி மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.699.17 கோடி மதிப்பீட்டிலான புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


தருமபுரி மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூ.699.17 கோடி மதிப்பீட்டிலான புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் இன்று (22.11.2023) நடைபெற்ற தருமபுரி மாவட்ட தொழில் முதலீடுகள் மாநாட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டு, விழாப்பேருரை ஆற்றினார்கள். இம்மாநாட்டிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார்கள்.


இம்மாநாட்டில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டை தொழில் வளர்ச்சியில் முதன்மையான மாநிலமாக மாற்றிட தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், அதன் அடிப்படையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், உலக முதலீட்டாளர்கள் மாநாடு வருகின்ற 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ளது.  


அனைவரையும், உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு டிரில்லியன் டாலர் பொருளதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும். அதிக அளவில் முதலீட்டாளர்கள் பங்கேற்கவும், மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் அதிகப்படியான முதலீடுகளை திரட்ட அதிக அளவிலான சாத்தியக்கூறுகள் உள்ளதால், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகள் மாநாடு ஒன்றினை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 


குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே அதிகப்படியான விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உள்ளூர் வளத்தைப் பொறுத்து, மாவட்டங்களில் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறியவும், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு எடுத்துச்செல்லவும், வருங்கால தொழில் முதலீட்டாளர்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு தொழில் வளத்தை பெருக்குவதே இந்த தொழில் முதலீடுகள் மாநாட்டின் நோக்காகும்.


உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்திற்கு ரூ.500 கோடி மதிப்பிலான முதலீடுகள் பெற்று பல்வேறு துறைகளில் தொழில்கள் துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்தில் 47 தொழில் நிறுவனங்கள் மூலம் ரூபாய் 699.17 கோடி புதிய முதலீடுகள் கண்டறியப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்படும். மேலும், இன்றைய தினம் 3 பயனாளிகளுக்கு 1.52 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது நமது தருமபுரி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தொழிற்பேட்டையில் ஸ்டீல், இன்ஜினியரிங், அக்ரோ, ஆட்டோமொபைல்ஸ், எலக்ட்ரிக் வாகன உற்பத்தி, பேட்டரி, டெக்ஸ்டைல்ஸ், உணவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய சுமார் 298 தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர்.


தமிழ்நாட்டில் தொழில் துறையில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றாக தருமபுரி தற்பொழுது முன்னேற்றமடைந்துள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள் புதிதாக தொழில் தொடங்க முன்வர வேண்டும். புதிதாக பல்வேறு தொழிற்சாலைகள் அமையும்பட்சத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இன்றைய தினம் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்ட அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ஜி.கே.மணி (பென்னாகரம்), திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன் (தருமபுரி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், தருமபுரி நகர்மன்றத்தலைவர் திருமதி.மா.இலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ஜி.சேகர், திரு.தாமரைச்செல்வன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரு.பா.கார்த்திகைவாசன், தருமபுரி மாவட்ட குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்கம் தலைவர் திரு. பா.வெங்கடேஷ்பாபு, கடகத்தூர் சிட்கோ குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் சங்கம் தலைவர் முனைவர். ஜெ.சரவணன், தருமபுரி இ-மேன் இந்தியா பிரைவேட் லிமிட்ட் திரு. வினோத் – தனசேகரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு. கு.கண்ணன், தருமபுரி சிட்கோ கிளை மேலாளர் திருமதி. அ.வ.வள்ளியம்மை, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மண்டல மேலாளர் திரு.மோகன், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை துணை இயக்குநர் திரு.க.சந்திரமோகன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் திருமதி. ஆ.நித்யலட்சுமி, மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குநர் (தொ.கூ) திருமதி. ம.சுவித்ரா, மாவட்ட தொழில்மைய ஊக்குவிப்பு அலுவலர் திருமதி.வெங்கடேஸ்வரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள், தொழில் முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad