ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையாளராக கலந்துகொண்டார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 1 நவம்பர், 2023

ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையாளராக கலந்துகொண்டார்கள்.


நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பார்வையாளராக கலந்துகொண்டார்கள். 

நவம்பர்– 1 உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் இன்று (01.11.2023) நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்கள். 


இக்கிராம சபை கூட்டத்தில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி அவர்கள் கலந்துகொண்டார்கள். பென்னாகரம் வட்டம், தித்தியோப்பனஅள்ளி ஊராட்சி, ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் இன்று நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் படிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.


இத்தீர்மானங்களில் முதலாவதாக நவம்பர் 1 ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக்கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி / சொத்துவரி செலுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், கிராம வறுமை குறைப்பு திட்டம் (Village Poverty Reduction Plan), கிராம வளர்ச்சிக்கான நிறைவான சுகாதாரத் திட்டம் (Village Sanitation Saturation Plan), கிராம வளர்ச்சிக்கான நிறைவான குடிநீர் திட்டம் (Village Water supply Saturation Plan), அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித்திட்ட ஒருங்கிணைப்பு திட்டம் (AGAMT Convergence Plan), கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், நிதிசெலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை, மக்கள் நிலை ஆய்வு, சுகாதாரம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மற்றும் தற்போது நடைபெற்று வரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து இக்கிராமசபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.


இக்கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 22.04.2022 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்கள். 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்த வேண்டி நவம்பர் 1-ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாகக் கொண்டாடிட அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே ஒவ்வொரு வருடமும் 4 முறை கிராமசபைகள் முறையே நடத்தப்பட்டு வந்தன. தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய 2 தினங்களில் கூடுதல் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகிறது.


அந்தவகையில் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள 251 கிராம ஊராட்சிகளிலும் இன்றைய தினம் உள்ளாட்சி தின கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு, இன்று நடைபெறும் இந்த உள்ளாட்சி தின கிராம சபை கூட்டத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உள்ளாட்சிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகள், சாக்கடை வசதிகள், சுகாதாரம், கழிப்பிட வசதிகள், கல்வி, மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அத்தகைய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை தங்கள் உள்ளாட்சிகளில் நிறைவேற்றிட முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.


மேலும், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்கா வண்ணம் பார்த்துகொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடித்தல், ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளுதல் போன்ற தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசால் பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அதிகாரம் அளித்தல் மூலம் பாலினப் பாகுபாட்டைத் தடுத்தலை நோக்கமாகக் கொண்டு முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இத்திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000/-மும், ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத்தொகையான தலா ரூ.25,000/- மும் வழங்கப்படுகிறது. இதுபோன்று மகளிர் முன்னேற்றித்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை குறித்து விழிப்புணர்வு பெற்று, பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்.


இதனை தொடர்ந்து, நவம்பர் 1- ஆம் நாள் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இக்கிராம சபைக்கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பான்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள். மேலும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டி, பரிசுகளை வழங்கி கௌரவித்தார்கள்.


முன்னதாக, ஆலமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள சமையல் கூடம் மற்றும் ஆலமரத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த உள்ளாட்சி தின கிராமசபைக் கூட்டத்தில் பென்னாகரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.கவிதா ராமகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திருமதி.அ.மாலா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திருமதி.க.விஜயா, பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர் திரு.சௌகத்அலி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.கல்பனா, தித்தியோப்பஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் திரு. சபரிநாதன், துணைத்தலைவர் திரு. மாதேஸ் உட்பட வார்டு உறுப்பினர்கள், இதர உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad