தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் / பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலையில் தருமபுரி மாவட்ட அனைத்து துறைகளின் வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று (29.11.2023) பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் / பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்களான பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. கா.அண்ணாதுரை அவர்கள், சேலம் (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு. இரா.அருள் அவர்கள், அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.கே.மோகன் அவர்கள், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. பெ.ராமலிங்கம் அவர்கள், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. அ.செ.வில்வநாதன் அவர்கள் ஆகியோர் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், அடிப்படை வசதிகள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுவினர் தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.5.40 கோடி மதிப்பீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருவதையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறையினையும் மற்றும் இதர அலுவலக அறைகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள். தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக கூடுதல் கட்டடம் 6.12 கோடி மதிப்பீட்டில் கட்ட நிதி உத்தரவு பெறப்பட்டு, தற்போது 5.40 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்பட்டு கடந்த 24.04.2023 அன்று முதல் செயல்பட்டு வருகிறது.
இதனைதொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் ரூ. 1.00 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, வள்ளல் அதியமான் கோட்டத்தில் ஒளி, ஒலி காட்சி அமைத்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், தருமபுரி மாவட்டத்தில் 1973 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தை வள்ளல் அதியமான் கோட்டம் அருகில் உள்ள அருங்காட்சியகத்துடன் இணைப்பதற்கு தேவையான கருத்துருவினை குழு பரிந்துரை செய்யும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து, தாளப்பள்ளம் ஊராட்சி, குள்ளனூர் அரசு மேல்நிலைப்பள்ளயில் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் கூடத்தினையும் அரசு உறுதிமொழிக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இப்பள்ளி வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றிகளை உடனடியாக வேறு இடத்திற்கு 15 நாட்களுக்குள் மாற்றிடவும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுவினரால் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் சேய் நல விடுதியினை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இப்பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக மேற்கொண்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணியினை தரமானதாகவும் முடித்து மக்கள் பயன்பாட்டை கொண்டு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொதுப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு உள்ளிடவற்றையும் ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ச்சியாக, பென்னாகரம் பேருந்து நிலையத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அனைத்து பணிகளையும் விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அரசு உறுதிமொழிக் குழுவால் அறிவுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக் குழுவினர் காரிமங்கலம் வட்டம், அனுமந்தபுரத்தில் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி மைய திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இத்திட்டத்தின்படி இங்கு தற்பொழுது 200 பெட்டை ஆடுகளும் 10 கிடாக்களும் மற்றும் 8 குட்டி ஆடுகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வாராய்ச்சி மையம் திருச்சி கருப்பு செம்மறி ஆடுகளில் இனவிருத்தி மந்தைகளை ஏற்படுத்துதல், மரபியல் பண்புகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல், உயர் ரக வீரியமான குட்டிகளை உற்பத்தி செய்தல் உள்ளிட்டவற்றை நோக்கங்களாகவும், தருமபுரி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட திருச்சி கருப்பு செம்மறி ஆட்டினங்களை அழிவிலிருந்து பாதுகாத்தல், வீரியமிக்க குட்டிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம் இவ்வினத்தை பாதுகாத்தல் உள்ளிட்டவற்றை பயன்களாகவும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு அமைக்கப்பட்டுள்ளதையும், குழந்தைகள் அவசர கால சிகிச்சை பிரிவினையும், கலப்பு உயர்சார்பு அவசர சிகிச்சை பிரிவு அலகினையும் (HHUD-Hybrid High Dependency Unit) தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை, அரசு உறுதிமொழிக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தொடச்சியாக, தருமபுரி மாவட்ட மைய நூலகத்தினையும் பார்வையிட்டார்கள்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, அரசு உறுதிமொழிக்குழுத் தலைவர் / பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில், குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நிலுவையில் உள்ள அரசு உறுதிமொழிகளின் மீதான பதிலுரைகள் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுகளின் போது, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஸ்டீபன் ஜேசுபாதம், தருமபுரி நகர்மன்றத் தலைவர் திருமதி.மா.இலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை இணைச் செயலாளர் திரு. மு.கருணாநிதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைச் செயலாளர் திரு. ஸ்ரீரா.ரவி, தமிழ்நாடு மின்சார வாரிய தருமபுரி மேற்பார்வைபொறியாளர் திரு.தமிழ்செல்வன், இணை இயக்குநர் (மருத்துவம்) மரு.ம.சாந்தி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சிவக்குமார், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.அமுதவல்லி, திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி மையம், தருமபுரி திட்ட ஒருங்கிணைப்பாளர்/தலைவர் மரு.முரளி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.ர.குருராஜன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.கே.கீதாராணி, தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சோ.புவனேஷ்வரன் உட்பட தருமபுரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து துறை தலைமை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக