"ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்" நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 25 நவம்பர், 2023

"ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்" நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு.


தருமபுரி மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய "ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்" எனும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.


தருமபுரி மாவட்டம், பச்சமுத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளி கல்வித்துறை மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் இணைந்து நடத்திய "ஆசிரியர்களுடன் அன்பில் நம்மில் ஒருவர்" எனும் நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இன்று (25.11.2023) முதன்மை விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையுரை ஆற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசியதாவது:- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி கல்வி துறைக்கென தனி கவனம் செலுத்தி மற்ற துறைகளை காட்டிலும் அதிக நிதி ஒதுக்கிடு தந்து பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றார்கள்.


தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் தோறும் சென்று பார்வையிட்டு வருகின்றேன். ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு கருத்துக்களைக் கேட்பதை நான் விரும்பவில்லை. இதற்கெல்லாம் எனக்கு முன்மாதிரியாக விளங்குபவர் நமது முதலமைச்சர் அவர்கள் தான்  நமது முதலமைச்சர் எங்குச் சென்றாலும் அங்கே நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்கிறார். காவல் நிலையம் சென்றால் எஸ்.ஐ இருக்கையில் அமர்ந்து ஆய்வு செய்கிறார்.


பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக இயங்கினால் எல்லாத் துறையும் சிறப்பாக இயங்கும். சிறந்த மனித வளத்தைப் பள்ளிக்கல்வித்துறை தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட உன்னத கடமை நமது ஆசிரியர்களுக்கு உண்டு  நான் ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆய்விற்குச் சென்றால் அங்கே ஆசிரியர்கள் முதல் மாணவர்கள், தலைமை ஆசிரியர் அனைவரும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை முழுமையாக அறிந்து கொண்டு தான் அங்கிருந்து புறப்படுவேன். உடனே அதைப்பற்றி அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்குத் தெரிவிப்பேன். ஆண்டு முழுவதும் நமது செயல்பாடு தான் ஆண்டின் முடிவில் தேர்ச்சி சதவீதமாக நமக்குக் கிடைக்கிறது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இருக்கின்ற துறைகளிலேயே பள்ளிக் கல்வித் துறைக்குத்தான் 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உங்களைச் சந்தித்த பின் எனக்கு உங்களிடமிருந்து கிடைக்கும் கோரிக்கைகளைக் கண்டிப்பாக  மாண்புமிகு முதல்வரிடம் தெரிவிப்பேன். தமிழ்நாட்டில் பின்தங்கிய என்ற வார்த்தையையே சொல்லக்கூடாது என்கிறார் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று உயர்கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றவர்கள் மூன்று மாணவர்கள். அதில் தமிழ்நாட்டிலிருந்து இரண்டு பேர் சென்று இருப்பது நம் தமிழ்நாட்டிற்கே பெருமை அளிக்கக்கூடிய விஷயமாகும்.


ஆசிரியர்களாகிய நீங்கள் ”மாணவர் ஆசிரியர் மனசு” செயலி மூலமாகவும் உங்களுடைய கோரிக்கைகளைத் தெரிவிக்கலாம்.  அவையும் உடனுக்குடன் பரிசீலனை செய்யப்படும். எத்தனை தொழில்நுட்பக் கருவிகள் வசதியோடு கல்வி கற்பித்தாலும், வகுப்பறையில் ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு ஈடாகாது. மாவட்ட ஆட்சித்தலைவரோடு இணைந்து ஆசிரிய பெருமக்களும் பணியாற்றிட வேண்டும். அப்பொழுதுதான் மாவட்டம் சிறந்த வளர்ச்சியை அடையும். மாணவர்கள் வெற்றியே நமது வெற்றியாகும். 


எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் வருங்கால சந்ததியினரான மாணவர்களை உருவாக்குவதில் கவனத்துடனும் அர்பணிப்பு உணர்வுடனும் பணியாற்றிட எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் இவ்வாறு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் பேசினார்கள். 


முன்னதாக தருமபுரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து தகடூரின் கல்விச் சிறகுகள் என்ற மாத இணைய இதழினை மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பெற்று கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் மனசு பெட்டியினை திறந்து வைத்து, தருமபுரி மாவட்டத்திலிருந்து கல்வி சுற்றுலாவாக வெளிநாடு சென்ற மாணவ, மாணவியர்களை பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை இயக்குநர் திரு.க.அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் திரு.ச.கண்ணப்பன், சிறப்பு பேச்சாளர் கல்லூரி பேராசிரியர்.பர்வீன் சுல்தானா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.ஐ.ஜோதி சந்திரா, பச்சமுத்து கல்வி குழுமம் தாளாளர் திரு.ப.பாஸ்கரன், மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி (தருமபுரி) திருமதி.மான்விழி, ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் நம்மில் ஒருவர் திரு.சிகரம் சதீஷ்குமார், தலைமையாசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், மாவட்ட திட்ட அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad