தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 6 நவம்பர், 2023

தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி, இஆப., அவர்கள் தலைமையில் இன்று (06.11.2023) நடைபெற்றது. இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள். 

அந்த வகையில் ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.


இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 390 மனுக்கள் வரப்பெற்றன.


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு அமைச்சுப்பணி தொகுதி-4 பதவிக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகளையும், பணியின் போது உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடத்தில் பணி நியமன ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.



இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும், மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மூன்று சக்கர சைக்கிள் வேண்டி இன்றைய தினம் மனுஅளித்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக மூன்று சக்கர சைக்கிளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள். 


பின்னர் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி 2022-2023 ஆண்டிற்கான இரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பாராட்டு சான்றிதழ், விருது மற்றும் கேடயங்களை வழங்கினார். இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு.சையது ஹமீத், இணை இயக்குநர் (மருத்துவம்) திருமதி.சாந்தி, அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் திருமதி.அமுதவல்லி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திருமதி நசீர் இக்பால், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வி.கு.மிரியாம் ரெஜினா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ராஜசேகர், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad