குக்கல்மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ரூ.1.17 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 டிசம்பர், 2023

குக்கல்மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் ரூ.1.17 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி, குக்கல்மலை கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் 101 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்டம், தருமபுரி வட்டம், கிருஷ்ணாபுரம் உள்வட்டம், திப்பிரெட்டிஅள்ளி தரப்பு, குக்கல்மலை கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (21.12.2023) நடைபெற்றது. இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பில் 48 பயனாளிகளுக்கு ரூ.53.35 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், 10 பயனாளிகளுக்கு ரூ.1.82 இலட்சம் மதிப்பீட்டில் திருமணம் உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகைகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 2 விவசாயிகளுக்கு ரூ.1.82 இலட்சம் மதிப்பீட்டில் நீர் சேகரிப்பு திடல், சொட்டு நீர் பாசன உதவித்தொகைகளையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.3.34 இலட்சம் மதிப்பீட்டில் சொட்டுநீர் பாசனம் நிதியுதவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் 5 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி உதவிகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.15,800/- மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகளையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 25 பயனாளிகளுக்கு ரூ. 27.00 இலட்சம் மதிப்பீட்டில் பயிர் கடன் உதவிகளையும், தாட்கோ 4 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர் நல வாரிய அட்டைகள் என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ. 1.17 கோடி (ரூ.1,16,98,109/-) மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


முன்னதாக, இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூகநலத்துறை, மகளிர் திட்டம், வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், கால்நடை பராமரிப்பு துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள்.


இம்மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்கள் தொடர்பு திட்ட முகாமானது பின்தங்கிய பகுதிகளை தேர்வு செய்து, அங்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் எடுத்துரைத்து, அப்பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறக்கூடிய ஒரு நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், பெரியவர்களுக்கும், பெண்களுக்கும், தாய்மார்களுக்கும், பொது மக்களுக்கும், நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துக்கூறும் விதமாகவும் இந்த முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இன்றைய தினம் குக்கல்மலை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 


இப்பகுதி மக்கள் பயன்பெறும் வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் சிரமங்களை போக்கும் வகையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெறுகின்றது. இப்பகுதியானது திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சியில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியானது சுமார் 7,000 மக்கள்தொகை கொண்டதாக அமைந்துள்ளது. இப்பகுதியின் முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் ஆகும். திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சியில் 5 தொடக்கபள்ளிகள் மற்றும் 2 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இக்கிராமத்திற்கு குடிநீர் வசதிகள், அங்கன்வாடி மையங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளிட்டவை செய்து தரப்பட்டுள்ளது. மீதமுள்ள வளர்ச்சித்திட்ட பணிகள் விரைந்து முடித்திட போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மேலும் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் துறை அலுவலர்கள் தங்களின் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்துள்ளனர். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்று, பின்னர் உயர்கல்வியில் சேரும் மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், இப்பகுதி மகளிர் அனைவரும் பயன்பெற வேண்டும்.


எனவே தங்களது வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை முறையாக, முழுமையாக படிக்க வைக்க வேண்டும். பெண் குழந்தைகள் கல்வி கற்றால் தான் பெண் குழந்தைகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும். மேலும், பொதுமக்களாகிய நீங்கள் அரசால் செயல்படுத்தப்படக்கூடிய முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத்திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், மற்றும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் முழுமையாக தெரிந்துகொண்டு, தகுதியான பயனாளிகள் விண்ணப்பித்து பயனடைய வேண்டும்.


இன்றைய தினம் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாமிற்கு முன்கூட்டியே மனுக்கள் பெறுவது தொடர்பாக இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் விழிப்புணர்வு செய்யப்பட்டு, வருவாய்துறை மற்றும் பிறத்துறை சார்ந்த அலுவலர்கள் முன்பாகவே இங்கு வருகைதந்து பொதுமக்களிடம் சுமார் 120 கோரிக்கை மனுக்களை பெற்று, தகுதி வாய்ந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இன்றைய தினம் 101 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.


மேலும் இந்த மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கை மனுக்களும் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்களும் உரிய முறையில் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் வழங்கப்படும். அரசு மக்களின் உயர்வுக்காக திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களை பொதுமக்களும் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இம்மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, தருமபுரி கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் திருமதி.யசோதா மதிவாணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி.பூங்கொடி சேகர், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.லட்சுமி ராஜேந்திரன், தனித்துணை ஆட்சியர் (சபாதி) திரு. சையது ஹமீது, துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை திருமதி.பாத்திமா, செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை திரு.மாது, மாவட்ட சமூக அலுவலர் திருமதி.பவித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜகுரு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திரு.செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.செண்பகவள்ளி, தருமபுரி வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சத்யா, திப்பிரெட்டிஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சித்ரா சுப்பிரமணி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் திருமதி.அஸ்வினி பெருமாள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து துறை மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad