பாலக்கோடு நீதிமன்றத்தில், ஓசூர் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் சரண்டர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 21 டிசம்பர், 2023

பாலக்கோடு நீதிமன்றத்தில், ஓசூர் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய 5 பேர் சரண்டர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பிஸ்மில்லா நகரை சேர்ந்தவர் பர்கத் (வயது.31) இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் முன்னாள் மாணவர் அணி நகர தலைவராக இருந்தார். அதேபோல ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியை  சேர்ந்தவர் பொன்வண்ணன் என்ற சிவா (வயது.27) இவர் தமிழக வாழ்வுரிமை கட்சியில் உறுப்பினராக இருந்தார். இந்த நேற்று முன்தினம் 19-ம் தேதி நள்ளிரவில் பார்வதி நகர் என்ற இடத்தில் 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வெட்டி படுகொலை செய்தது. இதில் இவர்களது நண்பர் பக்கா பிரகாஷ் என்பவர் தப்பித்து  ஓடியதில் உயிர் தப்பினார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஓசூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். 


இந்த நிலையில், இந்த சம்பவத்தின்போது தப்பித்த பக்கா பிரகாஷ் என்பவர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில் முன்விரோதம் காரணமாக ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த நாகராஜ், ராம்நகரை சேர்ந்த நவாஸ், சாந்தி நகரை சேர்ந்த ராதாகிருஷ்ணன், கனிஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ், ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த முனியப்பா மற்றும் கூச்சன் உள்ளிட்ட 15 பேர் தங்களை கொலை செய்ய வந்ததும் இதில் தான் தப்பியதாகவும், இவர்கள் தான் தன்னுடைய நண்பர்கள் பர்கத் மற்றும் பொன்வண்ணன் ஆகியோரை கொலை செய்ததாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.


அதன் அடிப்படையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு கன்ஞ்சூர் கிராமத்தை சேர்ந்த முனிராஜ் (49) என்பவரை  கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 


இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 10 க்கும் மேற்பட்ட கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று  மதியம் ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), உமேஷ் என்கின்ற முபாரக்  ( 26 ), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹாபித் (24) அபு (24) நிஜாம் (24) ஆகிய 5 பேரும் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். 


இதில் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ஓசூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் (37), சீதாராம்மேடு பகுதியைச் சார்ந்த ஹாபித் (வயது24) ஆகிய 2 பேரையும்   15 நாள் சிறை அடைப்பு காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மற்ற மூவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜராக கூறினார்.


அதனை தொடர்ந்து போலீசார் நவாஷ், ஹாபித் இருவரையும்  தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad