இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்களின் முன்னேற்றத்திற்கென எண்ணற்ற திட்டங்களை அறிவித்து, அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றார்கள். மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெண்களின் திருமணத்திற்காக பெண் குழந்தைகளின் பெற்றோருக்கு திருமண நிதியுதவி மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு தங்க நாணயம் அளிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்குகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
தருமபுரி மாவட்டத்தில் இன்றைய தினம் பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்த 196 பெண்களுக்கு தலா ரூ.50,000/- திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு முடிக்காத 170 பெண்களுக்கு ரூ.25,000/- திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் என மொத்தம் ரூ.1.41 கோடி (ரூ.1,40,50,000/-) திருமண நிதியுதவி மற்றும் ரூ.1.75 கோடி (ரூ.1,74,65,242/-) மதிப்பிலான 2.928 கிலோகிராம் தங்கமும் ஆக மொத்தம் 366 பெண்களுக்கு ரூ.3.15 கோடி (ரூ.3,15,15,242/-) மதிப்பிலான திருமண நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஆக்கப்பூர்வமான சமுதாயத்தை முன்னேற்றுகின்ற வகையில் பொறுப்புடனும், கடைமையுடனும் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகிறது. பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து அவர்கள் முதியவராகும் வரையிலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு நிரந்தர வைப்புத்தொகையாக முதலீடும், அரசு பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதியம் முட்டையுடன் கூடிய சத்துணவும், விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப்பைகளும், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், உயர்கல்வி பயிலும் அரசு பள்ளியில் பயின்ற மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கப்படுகிறது.
மேலும், ஈ.வே.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம், அன்னை தெரேசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம், டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம், டாக்டர்.முத்துலெட்சுமிரெட்டி கலப்பு திருமண நிதி உதவித்திட்டம் உள்ளிட்ட திருமண நிதி உதவி திட்டங்களின் கீழ், பெண்களுக்கு திருமண நிதி உதவியாக ரூ.25,000 முதல் ரூ.50,000-மும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. சமுதாய வளைகாப்பு, மகப்பேறு நிதி உதவியாக ஊட்டச்சத்து பெட்டகத்துடன் ரூ18,000/-மும், அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் 12 மாதங்கள்மகப்பேறு விடுப்பும் வழங்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தான் தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு, கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்களுக்கு அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் விடியல் பயணம் திட்டம், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்பில் 33 சதவிகித இடஒதுக்கீடு உள்ளிட்ட பெண்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. பெண்கள் இதுபோன்ற எண்ணற்ற பலதிட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றமடைவதோடு, வாழ்வாதாரத்திலும், பொருளாரத்திலும் சிறப்பான நிலையான அடைய எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன், தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.இலட்சுமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.தாமரைச்செல்வன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.பவித்ரா, உதவியாளர் திருமதி.இளவரசி உள்ளிட்ட தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக