விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்துவைத்து, இராகி கொள்முதலினை தொடங்கிவைத்தார்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 18 டிசம்பர், 2023

விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்துவைத்து, இராகி கொள்முதலினை தொடங்கிவைத்தார்கள்.


தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இராகி சிறுதானியம் வழங்கும் பொருட்டு, பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகம், வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் இன்று (18.12.2023) திறந்துவைத்து, இராகி கொள்முதலினை தொடங்கிவைத்தார்கள். 

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, ஒரு குடும்பத்துக்கு மாதம் ஒன்றுக்கு அரிசிக்கு பதிலாக இரண்டு கிலோ  ராகி (சிறு தானியம்) விநியோகம் செய்யும் பொருட்டு  ராகி சிறு தானியத்தை சிறு /குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்திட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு தற்போது அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வரப்பெற்றுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் இராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து சிறு/குறு விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 38.46 /- வீதம் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகம், வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து ராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.


தருமபுரி மாவட்டத்தில் நடப்பு கொள்முதல் பருவம் கே.எம்.எஸ் 2023-2024- தருமபுரி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், பென்னாகரம் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கட்டட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையமும், அரூர் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ஒரு ராகி நேரடி கொள்முதல் நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் செயல்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டத்தில் கடந்த வருடம் இராகி நேரடி கொள்முதல் நிலையங்கள் திறந்து சிறு/குறு விவசாயிகளிடமிருந்து 32150 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டதில் 1084 நியாய விலை அங்காடிகளின் மூலம் 4,68,168 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் பொதுவிநியோக திட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இராகி விநியோகிக்க கடந்த ஜூன் 2023 முதல் தற்போது வரையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாதம் ஒன்றுக்கு 931 மெ.டன் வீதம் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 2 கிலோ வீதம் அரிசிக்கு பதிலாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. 


தற்போது ராகி இறுதி இருப்பு 1152.746 மெ.டன் ஆக உள்ளது. கடந்த ஆண்டு ராகி ஒரு கிலோ ரூ.35.78/- என்ற விலையிலும் நடப்பு ஆண்டு ரூ.38.46/- என்ற விலையில்சிறு/குறு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் ஒரு கிலோ ரூ.26/- முதல் ரூ.30/- வரை என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து, மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் இராகி கொள்முதல் செய்யப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களுக்கான தொகையினை வழங்கினார்கள். 


பின்னர் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 16 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.73.76 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு ரூ.36,000/- மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் விதைகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், இணை இயக்குநர் (வேளாண்மை) திரு.வி.கிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் திருமதி.தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.குணசேகரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.நா.செல்வராஜ், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திருமதி.ரா.கவிதா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், பென்னாகரம் பேரூராட்சித்தலைவர் திரு.வீரமணி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad