மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து, நகராட்சி நிர்வாகத் துறையின் சார்பில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தருமபுரி நகராட்சி, சந்தைப்பேட்டையில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொலி காட்சியின் வாயிலாக இன்று (05.01.2024) திறந்து வைத்ததை தொடர்ந்து, இந்நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்கள்.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பு 2021-2022ல் மாண்புமிகு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் அவர்களின் சட்டமன்ற கூட்டத் தொடரில் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையின் போது, போட்டி தேர்வுகளுக்கு தயாராகவும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஏதுமாகவும் உள்ளாட்சி அமைப்புகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் 50 நூலகங்கள் மற்றும் அறிவுசார் மையங்கள் நடப்பாண்டில் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தருமபுரி நகராட்சிக்கு நகராட்சி நிர்வாக இணை இயக்குநர் திட்டங்கள் சென்னை அவர்களின் கடிதத்தின் படி ரூ.2.50 கோடியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைத்திட ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் வரவேற்பு அறை, மேலாளர் அறை, ஆண்கள் மற்றும் பெண்கள் தனியே அமர்ந்து படிக்கும் இடம், குழந்தைகள் படித்து பயன்பெறும் வகையில் நவீன வசதிகளுடன் அமையப்பெற்ற இடம் மற்றும் கூட்டரங்கமும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையம் நாளொன்றுக்கு ஏறக்குறைய 500 மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணாக்கர்களுக்கென வழிகாட்டுதலுடன் கூடிய பாட புத்தகங்கள், அறிவியல், இலக்கியம், வரலாறு, ஆராய்ச்சி கட்டுரைகள் என பல துறைகள் சார்ந்த புத்தகங்கள் மாணவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு புத்தகங்கள் இம்மையத்தில் உள்ளது. மேலும் மையத்தில் கட்டுப்பாட்டு அறை கணினி வசதி, 5 எண்ணிக்கையில் கழிவறை வசதி மற்றும் குடிநீர் வசதி, மின்வசதி ஆகிய அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, தருமபுரி நகர்மன்ற தலைவர் திருமதி.மா.இலட்சுமி, நகர்மன்ற துணைத்தலைவர் திருமதி.அ.நித்யா, நகர்மன்ற வார்டு உறுப்பினர்கள், வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், நகராட்சி ஆணையாளர் திரு.புவனேஸ்வரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக