தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேரூராட்சி, சந்தைதோப்பு பகுதியில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் ரூ.19.46 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள் மற்றும் நீர்குந்தியில் ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (04.01.2024) அடிக்கல் நாட்டி வைத்து, 156 பயனாளிகளுக்கு ரூ.80.14 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமை வகித்தார்கள்.
இதனைதொடர்ந்து, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் (2023-24) கீழ், ரூ.11.84 இலட்சம் மதிப்பீட்டில் பென்னாகரம் பேரூராட்சிக்கு மின் கலன் (Litihium) மூலம் இயங்கும் 6 வாகனங்களை பயன்பாட்டிற்கு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் கொடியசைத்து, தொடங்கி வைத்தார்கள்.
பின்னர், மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.20.00 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 10 விவசாயிகளுக்கு ரூ.1.19 இலட்சம் மதிப்பீட்டில் விசைத்தெளிப்பான்கள், சொட்டுநீர் பாசனம், தார்பாலின்களையும், மகளிர் திட்டம் சார்பில் 36 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16.10 இலட்சம் மதிப்பீட்டில் சுயஉதவிக்குழு கடன் உதவிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 1 விவசாயிக்கு ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டில் டிராக்டரினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.11,000/- மதிப்பீட்டில் காதொலிக் கருவிகளையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.30,800/- மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களையும், கூட்டுறவுத்துறையின் சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.33.12 இலட்சம் மதிப்பீட்டில் பயிர்கடன் என மொத்தம் 156 பயனாளிகளுக்கு ரூ.80.14 இலட்சம் (ரூ.80,13,723/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, வடிகால் வசதிகள் உள்ளிட்டவைகளை விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் முனைப்புடன் பணியாற்றி வருகின்றார்கள்.
அதனடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, பென்னாகரம் தேர்வு நிலைப் பேரூராட்சியில் பேரூராட்சிகள் துறையின் சார்பில் அம்ரூத் 2.0 (2023-2024) திட்டத்தின் கீழ், ரூ.19.46 கோடி மதிப்பீட்டில் பென்னாகரம் பேரூராட்சி முழுவதும் ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகள் இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த குடிநீர் மேம்பாட்டு பணிகளில் சின்னாறு நீர் ஆதாரத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்தல், நீர் உறிஞ்சு கிணறுகள் 3 எண்ணிக்கை, குடிநீர் பகிர்மான குழாய் 48.439 கி.மீ நீளம், குடிநீர் ஏற்றும் குழாய் 10.17 கி.மீ நீளம், 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுடன் இணைப்பு குழாய் 9.45 கி.மீ. நீளம் (4 இலட்சம் லிட்டர்-1 எண்ணிக்கை, 2 இலட்சம் லிட்டர்-1 எண்ணிக்கை, 1.50 இலட்சம் லிட்டர்-1 எண்ணிக்கை, 1 இலட்சம் லிட்டர்-2 எண்ணிக்கை, 60 ஆயிரம் லிட்டர்- 1 எண்ணிக்கை), புதிய குடிநீர் இணைப்புகள்-3041 எண்ணிக்கை, தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி 1 எண்ணிக்கை உள்ளிட்ட பணிகளும் அடங்கும். மேலும், பென்னாகரம் பேரூராட்சி, 1-வது வார்டு, நீர்குந்தியில் நபார்டு (2023-2024) திட்டத்தின் கீழ், ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தை வளம் செழிக்கும் மாவட்டமாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் வத்தல் மலை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் சுற்றுலா பணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கை பணிகளையும், சுற்றுலாத்துறையின் சார்பில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி முகாம்கள் அமைக்கப்பட்டு வருவதையும் தொடர்புடைய அலுவலர்களுடன் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதமாக மேற்கொள்ள உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்களுக்கென செயல்படுத்தி வரும் அனைத்து திட்டங்களையும் விரைந்து நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அரசு அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வுகளின் போது, தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.டி.ஆர்.கீதாராணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் திரு.வி.கிருஷ்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திருமதி.ஏ.ஜி.பாத்திமா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திரு.குணசேகரன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு. ர.குருராஜன், வட்டாட்சியர் திரு.சௌகத்அலி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.ஜி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், பென்னாகரம் பேரூராட்சித் தலைவர் திரு. கி. வீரமணி, காரிமங்கலம் பேரூராட்சித் தலைவர் திரு. பி.சி.ஆர்.மனோகரன், பென்னாகரம் பேரூராட்சித் துணைத்தலைவர் திருமதி. வள்ளியம்மாள் பவுன்ராஜ், பேரூராட்சி மன்ற உறுப்பினர் திரு. பி.கே. குமார் உள்ளிட்ட பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் முனைவர்.சு.கீதா உட்பட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக