தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கொண்டகரஅள்ளி ஊராட்சி, வத்தல்மலையில் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியூர் (வத்தல்மலை) மற்றும் ஆலாபுரம் கால்நடை மருந்தக கட்டடங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று (03.01.2024) திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கொண்டகரஅள்ளி ஊராட்சியில் நபார்டு திட்டம்-XXV-ன் கீழ், ரூ.56.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியூர் (வத்தல்மலை) புதிய கால்நடை மருந்தக கட்டடம் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், ஆலாபுரம் ஊராட்சியில் நபார்டு திட்டம்- XXVII-ன் கீழ், ரூ.45.93 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆலாபுரம் புதிய கால்நடை மருந்தக கட்டடம் என மொத்தம் ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டடங்களை திறந்து வைத்து, பெரியூர் (வத்தல்மலை) புதிய கால்நடை மருந்தக கட்டடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து, பார்வையிட்டார்கள்.
பின்னர் மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இதுவரை பேருந்து வசதியே இல்லாத வத்தல்மலைக்கு, முதன்முதலாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கிவைக்கப்பட்டு, பொதுமக்கள் இதன் மூலம் பயன்பெற்று வருகின்றனர். வத்தமலை பகுதியானது ஒரு சுற்றுலா தலம் போல் காட்சியளிக்க கூடியதாகவும், மனதிற்கு மனநிறைவு அளிக்க கூடிய இடமாகவும் உள்ளது.
இப்பகுதி மக்கள் அதிகமாக விவசாயத்தை மேற்கொண்டு வருவதோடு, அதற்கு நிகராக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டு வருவதால் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கி கொண்டும், பொருளாதாரத்தை மேம்படுத்தி கொண்டும் வருகின்றனர். கால்நடைகள் நல்ல ஆரோக்கியமாக இருப்பதற்கு புதிய கால்நடை மருத்துவமனைகளும், கால்நடை மருந்துகங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. ஆகையால் மலையைச் சார்ந்த இது போன்ற கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் கால்நடை மருந்தக கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.
கால்நடை மருத்துவமனைகள் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற கோமாரி நோய் தடுப்பதற்கு கோமாரி நோய் தடுப்பூசிகளும், வெறிநாய், பறவை காய்ச்சல் தடுப்பூசிகளும், பல்வேறு வகையான சிகிச்சைகளும் கால்நடைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாடுகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் கால்நடை மருந்தகங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
வத்தல் மலையில் ரூ.56.00 இலட்சம் மதிப்பில் ஒரு கால்நடை மருந்தக கட்டடம், ஆலாபுரத்தில் ரூ.45.93 இலட்சம் மதிப்பில் ஒரு கால்நடை கால்நடை மருந்தக கட்டடம் என 2 புதிய கால்நடை மருந்தக கட்டங்கள் கட்டப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக்கால்நடை மருந்தகங்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு, தங்களது கால்நடைகளுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகளையும், மருந்துகளையும் செலுத்திகொண்டு, நோய் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.டி.என்.வி.எஸ்.செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் முனைவர். பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.தடங்கம் பெ.சுப்பிரமணி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு. சுவாமிநாதன், துணை இயக்குநர் மரு.மணிமாறன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.மனோகரன், மாநில கைம்பெண் நலவாரிய உறுப்பினர் திருமதி.ரேணுகாதேவி, வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மா.சத்யா, திரு.அனந்தராம விஜயரங்கன், கொண்டகரஅள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சி.தங்கராஜ் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக