மார்ச் 1-ல் தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற இணைய வழி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

மார்ச் 1-ல் தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற இணைய வழி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டத்தில் வருகின்ற மார்ச் 1-ல்  தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற இணைய வழி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் வருகின்ற மார்ச் 1-ல்  தொடங்க உள்ள 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொது தேர்வுகள் குறித்து அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், விடுதிக்காப்பாளர்கள் பங்கேற்ற இணைய வழி ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்  திருமதி கி. சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.02.2023 அன்று நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கி. சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முழுவதும் வருகின்ற மார்ச் 1-ல்  முதல் 10, 12, மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் துவங்குகிறது. எனவே இன்னும் குறைந்த நாட்கள்  மட்டுமே  உள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களின் கடைசி நேர திருப்புதலை மிகச் சிறந்த முறையில் மேற்கொண்டு 100%  தேர்ச்சியை உறுதி செய்வதோடு தேர்ச்சி  சதவீதம் மட்டுமின்றி நன்றாக படிக்கும் மாணவர்கள் அனைவரும் சிறந்த  மதிப்பெண்கள் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.


தற்போது தேர்வு எழுதும்  12-ஆம் வகுப்பு மாணவர்கள், ஏற்கனவே 11-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாத பாடங்களையும்  சிறந்த  தயாரிப்புகளோடு   தேர்வு எழுதுவதற்கு சார்ந்த பாட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.  ஏனெனில் மேல்நிலை முதலாம்ஆண்டு, இரண்டாமாண்டு பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றாக வேண்டும். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்  கடந்த ஆண்டு வணிகவியல், வரலாறு, கணக்கியல் மற்றும் கணிதம் (Commerce, History, Accoundancy & Maths)  உள்ளிட்ட பாட  ஆசிரியர்கள் குறிப்பிட்ட பாடங்களில் வரும் பொதுத்தேர்வில்  தனிக்கவனம் செலுத்த  வேண்டும்.


மேலும், அனைத்து பாட ஆசிரியர்களும் தங்களது பாடங்களில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறுவதோடு மீத்திறன் மிக்க மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனெனில்  B.vsc, B.sc,  (Agri)  உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கு பொதுத்தேர்வில் பெறும்  மதிப்பெண்கள் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெறுகிறது என்பதால், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இது போன்ற படிப்புகளில் சேரும் வண்ணம் முழு முனைப்புடன் ஆசிரியர்கள்  பணியாற்ற வேண்டும்.


12-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு செய்முறை பொதுத் தேர்வுகள்  முடிந்துவிட்ட  நிலையில்  பொதுத்தேர்வு   முடியும் வரை அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வருகை புரிவதையும்,  பாட ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்குவதையும், காலை மற்றும் மாலை நேர சிறப்பு வகுப்புகள் தொய்வின்றி நடைபெறுவதையும்  தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.  மேலும்,  தங்களது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இப்பொருள் சார்ந்து  உரிய அறிவுரைகள் வழங்கி தொடர் கண்காணிப்பு  மேற்கொள்ள  வேண்டும்.


ஏற்கனவே, எனது தலைமையில் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு முடிவுகள்  சார்ந்த தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் தலைமை ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,  உயர் / மேல்நிலை  வகுப்புகளுக்கான  காலாண்டு தேர்வு தேர்ச்சி சதவீதத்தை விட  அரையாண்டு தேர்ச்சி சதவீதம் முறையே 23 சதவீதம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.  


இதே போன்று தொடர்ச்சியாக பொதுத்தேர்வு முடியும் வரை  மாணவர்களுக்கு தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை அளித்து  நமது  மாவட்டம்  மாநில அளவில்  முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற அனைவரும் ஒருங்கிணைந்து  செயல்பட வேண்டும்.  ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் உயர்ந்தால் மட்டுமே மாநில அளவில்  நமது மாவட்டம் முன்னிலைப் பெறமுடியும்.    இப்பொருள் சார்ந்து,  ஏற்கனவே உரிய அறிவுரைகளை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு பள்ளியிலும் தலைமைஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்  பெற்றோர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படும்  சூழலை  உருவாக்க  வேண்டும். 


கடந்த ஆண்டை காட்டிலும் தேசிய வாருவாய் வழி திறனறி தேர்வு (NMMS) தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி, ஒன்றிய அளவில் மாவட்ட கல்வித்துறை சார்பில் மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளிலும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.  


தற்போது பயிலும் 7-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  பொதுத் தேர்வு முடிந்தவுடன் NMMS,   SAT தேர்வு  பாடப் பகுதிகளை கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு  சிறப்பு பயிற்சியை திட்டமிட்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் வரும் கல்வியாண்டிலும்  தேர்ச்சி பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும். இதைப் போலவே முதலமைச்சர் திறனாய்வுத்  தேர்வு மற்றும் தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்விலும் குறிப்பிடத்தக்க பள்ளிகளில் மட்டுமே  மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு  எப்பள்ளிகளில்  உள்ளதோ அப்பள்ளிகளில் தேர்ச்சி எண்ணிக்கை அதிகமாக  உள்ளது. எனவே, வருங்காலங்களில் பள்ளிகளில் ”Team  Building”  செயல்பாடுகளில் தனிக்கவனம்  செலுத்த  தலைமையாசிரியர்களுக்கு  தெரிவிக்கப்படுகிறது. கடந்த கல்வியாண்டில், 57  மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்பிலும் ( (MBBS), 9 மாணவர்கள் பல் மருத்துவ பட்டப்படிப்பிலும் (BDS) சேர்ந்துள்ளனர். 


கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் சார்பில் கால அட்டவணை தயார் செய்து அதன் அடிப்படையில் வினாத்தாட்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனை முழுமையாக பயன்படுத்தி இக்கல்வியாண்டில் பொதுத்தேர்வுக்கு பின் சிறப்பு பயிற்சி அளித்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை மருத்துவ படிப்பில் சேர அர்ப்பணிப்புடன் செயல்பட தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்ளுக்கு தெரிவிக்கப்படுகிறது.


இதைப் போன்றே சென்ற கல்வியாண்டில் JEE தேர்வு மூலம் IIT /NIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் 8 மாணவர்கள் சேர்ந்த நிலையில்,  இரண்டாம் கட்ட  JEE Mains  தேர்வில் மாணவர்கள் சிறந்த அடைவை அடைய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.  தருமபுரி மாவட்டம் கல்வியில் சிறந்த நிலையினை அடைவதற்கு முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் விடுதிகாப்பாளர்கள் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.


இந்நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ஜோதி சந்திரா, மாவட்ட கல்வி அலுவலர் முனைவர்.மான்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திரு.ஷாகுல் அமீது, பழங்குடியினர் நல உதவி இயக்குனர் திரு.கண்ணன் ஆகியோர் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad