காரிமங்கலம் ஒன்றியத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 7 பிப்ரவரி, 2024

காரிமங்கலம் ஒன்றியத்தில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு.


தர்மபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்பு துறை சார்பாக மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் ஏ. பானுசுஜாதா, எம்.பி.,பி.எஸ்., மற்றும் சேலம் உணவு பகுப்பாய்வு வாகனம் (பொறுப்பாளர்) முதுநிலை பொது பகுப்பாய்வாளர் திரு. நரசிம்மன் அவர்கள் இருவரின் வழிகாட்டுதல் மற்றும் ஏற்பாடுகளின் படி  மாவட்டம் முழுவதும் சென்று உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிதல் , தரம் அறிதல்  மற்றும் உணவு பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்த  விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக காரிமங்கலம் ஒன்றியத்தில் காரிமங்கலம் பேருந்து நிலையம், சந்தை பகுதி, மொரப்பூர் ரோடு, ஈபி ஆபிஸ், ராமசாமி கோயில் பகுதி, தர்மபுரி ரோடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலர் வளாகம் மற்றும் பெரியாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் சேலம் ஆய்வக இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட குழுவினர்   உணவு  பாதுகாப்பு நடமாடும் வாகனம்(food safety on wheel) மூலம் விழிப்புணர்வு செய்தனர். 


காரிமங்கலம் பேருந்து நிலையம் மற்றும் வார சந்தை பகுதியில்  வணிகர்கள், பொதுமக்கள் முன்னிலையில் உணவு பாதுகாப்பு நடமாடும் முன்பாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு காணொளி காட்சிகள் மற்றும் உணவு கலப்படம் குறித்து  நேரடி செயல் விளக்கம் உடன் பேருந்து நிலைய, சந்தையில்  உள்ள கடைகளில் இருந்து  பால், தேயிலை, உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், பச்சை பட்டாணி இனிப்பு வகைகள் தின்பண்டங்கள் கார வகைகள் என உணவு மாதிரி எடுத்து  வந்து வாகனத்தில் ஸ்பாட்டிலேயே பகுப்பாய்வு செய்து காண்பிக்கப்பட்டது. ஒரு சில பொருட்கள் தரம் குறைவானது கண்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ள விற்பனையாளர்களுடைய முகவரி சேகரிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில்  வட்டார மருத்துவ அலுவலர் திருமதி. அனுராதா அவர்கள் ஒருங்கிணைப்பில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் திரு.பாலவெங்கடேசன், மருத்துவர் முருகன், பயிற்சி மருத்துவர்கள், சித்தா மருத்துவ அலுவலர் திரு. முத்துக்குமரன் மற்றும் பகுதி சுகாதார செவிலியர் ராஜேஸ்வரி, நிலைய மற்றும் துணை சுகாதார நிலைய சுகாதார செவிலியர்கள், மருந்தாளுனர் வேடியப்பன் உள்ளிட்டோர் முன்னிலையில் பொதுமக்கள், கர்ப்பிணிகள், தாய்மார்கள் மற்றும் நிலைய பணியாளர்கள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்பில் வாகனத்தில் உள்ள எல்.இ.டி. டிவி வழியாக உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு காணொளி காட்சிகள் உணவு பாதுகாப்பு குறித்தும்,உணவுப் பொருட்கள் கலப்படம் கண்டறிதல், உணவு பொருள் பாக்கெட்டுகளில் காண வேண்டிய அம்சங்கள் குறித்தும்  வீடியோ விழிப்புணர்வு  காண்பிக்கப்பட்டு விழிப்புணர்வு பிரசுரங்களும் அளிக்கப்பட்டது.


இருபத்தைந்துக்கும் மேற்பட்ட  அளவிலான டீத்தூள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், செயற்கை நிறம் ஏற்பட்ட பச்சை பட்டாணி, கார வகைகள், இனிப்பு பண்டங்கள், மசாலா பொருட்கள் உள்ளிட்ட உணவு மாதிரிகள் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் அவர்களால் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்டு, பகுப்புப்பாய்வுக்கு அளிக்கப்பட்டது. சில பொருட்கள் களத்திலே ஆய்வு செய்ததில் வறுத்த பச்சைபட்டாணி, இனிப்பு தின்பண்டங்களில்  செயற்கை நிறமூட்டிகள் அதிகம் சேர்க்கப்பட்டது கண்டறிந்து  பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. உடன் எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மற்ற பொருட்கள் பரிசோதனை முடிவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும்,விழிப்புணர்வு தொடர்ச்சியாக  மாவட்டம் முழுதும் நடைபெற  பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் தெரிவித்தார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad