தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம்


தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை (NH 44) தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தருமபுரி – சேலம் தேசிய நெடுஞ்சாலை (NH 44) தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடான கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் 01.02.2024 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தொடர் சாலை விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட சாலை பாதுகாப்பு குழுவின் தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் கடந்த 29.01.2024 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திட்ட அலுவலர், NHAI, வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


இதனைதொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர், தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர், L&T டோல் பிளாசா மேலாளர் ஆகியோருடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் விபத்துக்கான பிரதான காரணமான பகுதியில், வளைவுகளுடன் கூடிய அதிசாய்வான சாலை பகுதியாக உள்ள காரணத்தால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாவதாக தெரிவிக்கப்பட்டது. 


எனவே, சாலையின் சாய்வினை சரி செய்யும் வகையிலும், விபத்துக்களை நிரந்தரமாக தவிர்க்கும் வகையிலும் சுமார் ரூபாய் 702.00 கோடி செலவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் திட்டமிடப்பட்டு, ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி திங்கள் ஒப்பந்த புள்ளிகள் இறுதி செய்யப்பட்டு, சுமார் 3 ஆண்டு காலத்திற்குள் இப்பணியினை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.


உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டதின் கீழ் தொப்பூர் கணவாய் மலைப்பகுதி சாலை 6-வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட உள்ளது. தற்போது உள்ள சாலையின் ஏற்ற / இறக்கங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் மேம்படுத்தப்படும். தற்போது உள்ள தருமபுரி -சேலம் இடதுப்புற சாலை மேம்பாலத்துடன், குறுகிய வளைவுகள் இன்றி விரிவாகத்துடன் 3 வழி சாலையாக போக்குவரத்துக்கு எளிதாக்கப்படும். 


மேலும் தரைவழி பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகள் தொப்பூர், மேட்டூர் ஆஞ்சநேயர் கோவில் செல்வதற்கும் மற்றும் U வளைவிற்கும் கட்டப்பட உள்ளன. மேற்கண்ட திட்ட பணிகளுக்காக தருமபுரி மாவட்டத்தில் 2.7692 Hect நிலமும் சேலம் மாவட்டத்தில் 1.7711 Hect. மற்றும் வனத்துறை 13.427 Hect. நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளன. தற்காலிகமாக விபத்து தடுப்பு நடவடிக்கையாக இரட்டை பாலத்தின் (தருமபுரி - சேலம்) இடது புற சாலையை சுமார் 5.50 மீட்டர் அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டு, இதற்கான திட்ட மதிப்பீடு துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக பணிகளை துவக்க நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


சாலையின் இடதுபுற இருசக்கர வாகன பாதையினை மேம்படுத்தவும் / அகலப்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டு, கட்டமேடு பகுதியிலிருந்து இரட்டை பாலம் வரை இருசக்கர வாகனம் மற்றும் கனரக வாகனங்கள் தனித்தனியே பிரிந்து செல்ல பொல்லார்ட்ஸ் (Bollards) பொருத்த முடிவு செய்யப்பட்டு, பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சென்டர் மீடியனில் மண் நிரப்பப்பட்டு உயரபடுத்திடவும், ஆஞ்சநேயர் கோவில் வளைவு மற்றும் தேவையான வளைவுகளில் வாகனங்கள் உடனடியாக நிறுத்துவதற்கேற்ப ரேம்ப் (Ramp) அமைத்திடவும், கனரக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் போது நிறுத்தும் வகையில் சாலை ஓரத்தில் மணல் பாதைகள் அமைக்கவும், விபத்து பகுதி என்பதற்கான அறிவிப்பினை கூடுதலான தொலைவிற்கு நீட்டிக்கவும், சாலையின் சில பகுதிகளில் உள்ள சிறிய மேடு பள்ளங்களை சரி செய்யவும், ஒளி பிரதிபலிக்கும் அமைப்புகளை சாலையின் முழு நீளத்திற்கும் அமைக்கவும், சாலை விபத்துகள் ஏற்படும் நேர்வில் அவசர வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு சாலை விபத்து மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுரைகள் வழங்கப்பட்டது.


இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், சேலம் திட்ட செயலாக்க அலகு திட்ட இயக்குநர் திரு.சீனிவாசலு, சேலம் திட்ட செயலாக்க அலகு மேலாளர் திரு.திலீப் வர்மா, நெடுஞ்சாலை இயக்க அலுவலர் திரு.ராம்குமாரன், L&T டோல் பிளாசா இயக்க மேலாளர் திரு.அருண்குமார், L&T டோல் பிளாசா சாலை பாதுகாப்பு மேலாளர் திரு.ஞானசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.தரணிதரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad