தருமபுரி மாவட்டம், அரூரில் கொங்கு வேளாளக் கவுண்டர்கள் திருமண மண்டபத்தில், இளைஞர்களின் நலனுக்காக ரூ.10 கோடி மதிப்பீட்டில் கொங்கு பல்நோக்குப் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் திறப்பு விழாவில் தருமபுரி மாவட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்க செயலர் எம்.கே.சேகர் தலைமை வகித்தார். சங்கபொருளர் எஸ்.எம்.தங்கராசு வரவேற்றார்.
கொங்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை அதிமுக பொதுச் செயலரும், தமிழக சட்டப் பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்து பேசியதாவது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகுநான் முதலமைச்சாரக பொறுப்பேற்றேன். அப்போது இருந்த எதிர்கட்சித் தலைவர்கள் என்னை ஏளனப்படுத்தி பேசினார்கள். ஆறு மாதங்கள் கூட அதிமுக ஆட்சி நீடிக்காது என்றனர். ஆனால் எனது தலைமையில் நான்கு வருடம், இரண்டு மாதங்கள் சிறந்த ஆட்சியை நடத்தினோம்.
தமிழகத்தில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள், தருமபுரி உள்பட 6 சட்டக் கல்லூரிகளை தொடங்கினோம். அதோபோல், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக இருந்துள்ளது. இன்று தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால், திமுக
2 வருடங்கள், 8 மாத காலம் ஆட்சியில் இருந்தும் எந்த சிறந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. நீட் விலக்குகோரி திமுகவினர் லட்சகணக்கானோரிடம் கையொப்பம் பெற்றனர். நீட் விலக்கு கோரி கையொப்பம் பெற்ற கையெழுத்து பிரதிகள் சேலத்தில் அண்மையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் சிதறி கிடந்தது தெரிவந்தது. திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.
அதிமுக ஆட்சியில் தேசிய அளவில் உள்ளாட்சித் துறையில் 140 விருதுகள் பெற்றோம். அதிமுக ஆட்சியில் தடை இல்லா மின்சாரம் தந்தோம். விவசாயிகளுக்கு மும்முணை மின்சாரம் 24 மணி நேரமும் வழங்கப்பட்டது. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை கீழ் வரும் 40 ஆயிரம் ஏரிகளில் குடிமராமத்து திட்டம் மூலம் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு அதில் கிடைக்கும் வண்டல்மண் விவசாயிகளுக்கு இலவச பயன்படுத்திக் கொள்ள வகை செய்தோம். ஆனால் இன்று ஏரியில் ஒரு லோடு மண் அள்ள முடியுமா என்ற நிலையுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. திமுக ஆட்சியில் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றார். முன்னதாக, அரூர் திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் ஓட்டி அதிமுக பொதுச் செயலரும், எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடக்கி வைத்தார். இந்த விழாவில் மண்டப வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கும், அருள்மிகு விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
கொங்கு பல்நோக்குப் பயிற்சி மையத்துக்கு நன்கொடை வழங்கியோருக்கு முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நினைவு பரிசுகளை வழங்கினார். விழா மலரை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார், அதிமுக ஒன்றிய செயலர் ஆர்.ஆர்.பசுபதி, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்க இளைஞரணி செயலர் ஏ.வி.ஆர்.தமிழரசன், தொழிலதிபர் ஆர்.கே.மதன்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
கொங்கு இளைஞர்களின் மேம்பாட்டிற்கான வழிகாட்டுதல் கருத்துரைகளை முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வழங்கினர். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் முழு உருவ வெண்கலச் சிலையை வடித்த சிற்பி கிஷோர் ஜெ. நாகப்பாவுக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
விழாவில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி மாநிலத் தலைவர் எம்.யுவராஜா, அரூர் எம்எல்ஏ வே.சம்பத்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தருமபுரி மாவட்ட கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்க தலைவர் வே.சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக