இந்தத் திருத்தேரோட்ட பெருவிழாவிற்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் தர்மபுரி மாவட்டத்தில் இருந்தும், தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களின் பல கிராமங்களில் இருந்தும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே பக்தர்கள் மற்றும் பொது மக்களின் சிரமங்களை தவிர்க்கவும் அவர்களின் நலன்களை காக்கவும் சில முன்னேற்பாடுகள் கோட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு, நாளை நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
ஆகவே இப்பெருவிழாவில் கலந்து கொள்ள வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கீழ்காணும் நடைமுறைகளை கடைப்பிடித்து, எவ்வித நெரிசலும் இன்னல்களும் இன்றி, திருத்தேரோட்ட நிகழ்வினை கண்டு களித்து சென்றிட வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
திருவண்ணாமலை, நரிப்பள்ளி கோட்டப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து திருத்தேரோட்ட நிகழ்விற்கு தீர்த்தமலை வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை RK ஏஜென்சீஸ் பெட்ரோல் நிலையம் எதிரில் அமைந்துள்ள ரங்கா நகர் என பெயரிடப்பட்டுள்ள இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
அதே போன்று அரூரிலிருந்து பாளையம், வீரப்பநாயக்கன்பட்டி, வேப்பம்பட்டி, ஈட்டியம்பட்டி, எம். தாதம்பட்டி ஆகிய ஊர்களின் வழியாக அந்த நெடுஞ்சாலையில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை AKS பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள காலி இடத்தில் நிறுத்துதல் வேண்டும்.
அதே போன்று பொய்யப்பட்டி, சங்கிலிப்பட்டி, மாம்பட்டி மற்றும் அனுமன் தீர்த்தம் ஆகிய இடங்களில் இருந்து வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சென்னம்மாள் பெட்ரோல் பங்க் எதிரில் அமைந்துள்ள இடத்தில் தங்கள் நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களை நிறுத்த வேண்டும்.
மேலும் நாளை ஒருநாள் தீர்த்தமலை பஸ் நிலையம் தற்காலிகமாக மின்சார வாரிய அலுவலகத்தின் அருகே செயல்படும், மேலும் திருக்கோயிலின் உள்ளே தற்காலிக கடைகள் வைப்பதற்கு இந்த முறை அனுமதி வழங்கப்படவில்லை.
அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கூட்ட நெரிசல்களை தவிர்க்கும் வகையில் முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வழங்கிடுமாறு கனிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பக்தர்களின் நலன் காக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை, கோட்ட நிர்வாகத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என அரூர் வருவாய் கோட்டாட்சியர் இரா.வில்சன் இராசசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக