பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை - மருத்துவர்களுக்கு பாராட்டு - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 5 மார்ச், 2024

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை - மருத்துவர்களுக்கு பாராட்டு


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த முதலிப்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சின்னசாமி (வயது. 60). இவர் கடந்த 5 ஆண்டுகளாக கால் மூட்டு எலும்பு தேய்ந்து நடக்க முடியாமல் அவதியடைந்து வந்தவர். கடந்த மார்ச் -1ம் தேதி பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார், இவரை பரிசோதித்த மருத்துவர்கள் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினர்.

அதனை தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் சின்னசாமிக்கு இலவசமாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது, அதனை தொடர்ந்து சின்னசாமி தற்போது சொந்த காலில் நடந்து மகிழ்ச்சி அடைந்தார். இது போன்று அறுவை சிகிச்சைகள் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தாலுக்கா மருத்துவமனையில் முதல் முறையாக செய்யப்பட்டது நோயாளிகளிடையே மகிழ்ச்சியையும் நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனையறிந்த தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் மற்றும் சுகாதார இணை இயக்குநர் சாந்தி அவர்கள் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் உள்ள சின்னசாமியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதனை தொடர்ந்து தலைமை மருத்துவர் பாலசுப்ரமணியம், எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்  வசந்தராஜ், மருத்துவர் கார்த்திக், மயக்க மருந்து சிகிச்சை நிபுணர் மருத்துவர் சிலம்பரசன், பொது அறுவை சிகிச்சை மருத்துவர் ஜெகதீசன், மருந்தாளுர்நர்கள் முத்துசாமி, முருகேசன் மற்றும் செவிலியர்களுக்கு வாழ்த்து கூறி பாராட்டு தெரிவித்தார்.


அதனை தொடர்ந்து இணை இயக்குநர் மருத்துவர் சாந்தி கூறுகையில் இது போன்ற மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் தனியார் மருத்துவமனையில் 2 இலட்சம் ரூபாய் வரை செலவாகும், ஆனால் பாலக்கோடு அரசு மருத்துவமனையில்  தற்போது, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, கர்ப்பபை அறுவை சிகிச்சைகள் போன்றவை இலவசமாக  சிறப்பான முறையில் செய்து வருவதால் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad