வெளியூர் நபர்கள் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 16 ஏப்ரல், 2024

வெளியூர் நபர்கள் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் மாவட்டத்தை விட்டு வெளியேறவேண்டும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024ஐ முன்னிட்டு, தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு வெளியூர்களிலிருந்து வந்துள்ள கட்சி தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர்வலம் மற்றும் பிரச்சாரத்திற்காக கல்யாணமண்டபம்/சமூகக் கூடங்கள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் (Lodges) போன்றவற்றில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் நாளை 17.04.2024 மாலை 06.00 மணிக்கு மேல் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி, எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல் பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் நாளை (17.04.2024) மாலை 06.00 மணியுடன் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஓய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், தருமபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நாளை (17.04.2024) மாலை 06.00 மணிக்கு மேல் எந்த வகையிலுமான பிரச்சாரமும் மேற்கொள்ளக்கூடாது.


மேலும், எந்த வகையான சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களிலும், ஒலிப்பதிவு, தொலைக்காட்சி அல்லது அது போன்ற பிற கருவிகள் மூலம் தேர்தல் தொடர்பான விசயத்தை பொதுமக்களுக்கு காட்டக்கூடாது. இதில் அனைத்து மின்னணு தகவல் தொடர்புகளும் அடங்கும்.  மேலும், பொதுமக்களை ஈர்க்கும் வகையில் எந்தவொரு இசைக் கச்சேரி அல்லது நாடக நிகழ்ச்சி அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவைகள் மூலம் பொதுமக்களுக்கு அரசியல் சார்ந்த பிரச்சாரம் ஏதும் செய்யக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.  


மேலும், பிரச்சாரம் ஓய்ந்த உடன் 17.04.2024 அன்று மாலை 06.00 மணிக்கு மேல் வெளியூர்களிலிருந்து இருந்து வரவழைக்கப்பட்ட அரசியல் பிரமுகர்கள், கட்சி தொண்டர்கள், ஊர்வலம் மற்றும் பிரச்சாரத்திற்காக வரப்பெற்ற கட்சி தொண்டர்கள், உள்ளிட்டோர் மற்றும் கல்யாணமண்டபம்/சமூகக் கூடங்கள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் (Lodges) போன்றவற்றில் தங்கியுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் தருமபுரி பாராளுமன்ற தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.


மேற்கண்ட விதிகளை மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டணை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.  இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad