மத்திய அரசின் சான்றிதழ் என்கிற பெயரில் பெண்களை குறிவைக்கும் கும்பல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 23 மே, 2024

மத்திய அரசின் சான்றிதழ் என்கிற பெயரில் பெண்களை குறிவைக்கும் கும்பல்.


இன்றைய சூழலில் நடுத்தர குடும்பங்கள் குடுபத்தை நடத்த கணவரின் வருமானம் போதவில்லை என்பதற்காக மனைவியும் சம்பாதிக்க வேண்டிய சூழல் உள்ளது, இதனால் வீட்டிலுள்ள பெண்கள் தையல், அழகுக்கலை போன்ற பயிற்சிகள் பெற்று வீடலிருந்து சம்பாதிக்க விரும்புகின்றனர்.


இதனை தங்களுக்கு சாதகமாக்கி பணம் பறிக்கும் நோக்கோடு சிலர் எங்களிடம் பயிற்சி பெறும் அனைவருக்கும் மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என விளம்பரம் செய்து வருகின்றனர், இது உண்மையிலேயே மத்திய அரசு வழங்கும் பயிற்சி சான்றிதழ் தானா? என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.


முதலில் நீங்கள் சேரவிரும்பும் பயிற்சி நிறுவனம் மத்திய அரசில் எந்த பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளுங்கள் பொதுவாக பின்வரும் பிரிவுகளில் தான் பதிவு செய்துவைத்திருப்பார்கள்.


1. MSME எனப்படும் சிறு, குறு நிறுவனங்கள் பதிவு, அதன் பதிவு எண் UDYAM-XY-07-1234567 அல்லது TN-07-1234567 என்கிற முறையில் இருக்கும்.

2. டிரஸ்ட் அல்லது சொசைட்டி பதிவு  அதன் பதிவு எண் 2015/2024 முறையில் இருக்கும்.

3. பிரபல பல்கலைக்கழகங்கள் அல்லது அரசின் திறன் வளர்ப்பு திட்டத்தின் அதிகாரப்பூர்வ பயிற்சி மையங்கள் பதிவு.


இதில் பெரும்பாலும் பணம் பறிக்கும் கும்பல்கள் டிரஸ்ட் அல்லது சொசைட்டி பதிவில் தங்கள் நிறுவனங்களின் பெயரை "கவுன்சில்" என்கிற பெயருடன் (உதாரணம் : தமிழ்நாடு ஓகேஷனல் பயிற்சி கவுன்சில்) பதிவு செய்துகொண்டு தங்களை அரசின் நிறுவனம் என்கிற முறையில் காட்டிக்கொள்வார்கள். இவர்கள் பெரும்பாலும் சில அமைப்புகளின் உறுப்பினராக இருந்துகொண்டு அந்த அமைப்பின் பதிவு பெற்றவர்களாக காட்டிக்கொள்வார்கள் உதாரணமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் அமைப்பில் உறுப்பினராக பணம் கட்டி சேர்ந்துகொண்டு தாங்கள் அந்த அமைப்பில் அங்கீகாரம் பெற்றவர்களாக காட்டிக்கொள்வார்கள்.


அரசின் சான்றிதழ் பெற விரும்பும் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் நடத்தப்படும் பயிற்சியில் இணைந்து அவர்கள் தரும் சான்றிதழ் மட்டுமே வங்கியில் கடன் பெறவும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவும் உதவியாக இருக்கும், மற்றபடி கவுன்சில் என்கிற பெயரில் சான்றிதழ் வழங்கும் நிறுவனங்களின் உண்மைத்தன்மையை அறிந்து இணையவும்.


தற்போது திறன் வளர்ப்பு பயிற்சி என்கிற பிரிவில் இதுபோன்ற நிகழ்வுகள் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது, மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் என பொய்யாக விளம்பரம் செய்துகொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். 


அவர்கள் வழங்கும் சான்றிதழ் மத்திய அரசு சான்றிதழ் அல்ல மத்திய அரசில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனத்தின் சான்றிதழ் மட்டுமே என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சான்றிதழ்கள் உங்களுக்கு எவ்வித பயனும் கொடுப்பதில்லை, கொடுக்கப்போவதுமில்லை, என்பதை அறிந்து தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். மத்திய அரசின் சான்றிதழ் என்பதற்காக பணம் கட்டி ஏமாற வேண்டாம்.  


குறிப்பாக வீட்டில் உள்ள பெண்களை குறிவைத்து இதுபோன்ற மோசடிகள் நடைபெறுகிறது, வீட்டில் உள்ள பெண்கள் தாங்கள் ஏதேனும் கைத்தொழில் செய்து குடும்பத்தின் வருவாயை பெருக்க வேண்டும் என நினைக்கும் பெண்களை எளிதில் இவர்கள் மூளை சலவை செய்து ஏமாற்றிவருகின்றனர். தாட்கோ, சமூகநலத்துறை மற்றும் இந்தியன் வங்கி போன்ற நிறுவனங்களும் திறன் வளர்ப்பு பயிற்சியை வழங்கிவருகிறது, இந்த பயிற்சிகள் உங்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பையும், அரசின் சான்றிதழையும் பெற்றுக்கொடுக்கும்.


அரசு இது போல போலியாக செயல்படும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad