தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.06.2024) நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 1433-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) இன்று 25.06.2024 முதல் 28.06.2024 வரை வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெறுகிறது. அதன்படி, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது.
அதன்படி இன்றைய தினம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட கூத்தப்பாடி, அளேபுரம், அஞ்சே அள்ளி, ரங்காபுரம், கட்டிநாயக்கன அள்ளி, சிகரலஅள்ளி, சத்தியநாதபுரம், பருவதனஅள்ளி, பென்னாகரம், பேயல்மரி, செங்கனூர், கூக்குட்ட மருதஅள்ளி ஆகிய வருவாய் கிராமத்திற்கான தீர்வாயம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வருவாய் தீர்வாயத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசுச் சான்று, பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, குடும்ப அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, முதல் பட்டதாரிச் சான்று மற்றும் இருப்பிடச்சான்று என மொத்தம் 386 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றுள்ளன.
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பெறப்படும் அனைத்து கோரிக்கை மனுக்களையும் முழுமையாக ஆய்வு செய்து தகுதியுடைய மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு உடனடி தீர்வு காண வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து வரும் பதிவேடுகள், வருவாய்த் துறையினுடைய ஆவணங்கள் மற்றும் அலுவலகத்தில் உள்ள நில அளவை கருவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் திரு.ராஜசேகர், பென்னாகரம் வட்டாட்சியர் திரு.சுகுமார், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி.மகாலட்சுமி, உதவி இயக்குநர் (நில அளவை) திரு.செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சுருளிநாதன் மற்றும் துணை வட்டாட்சியர்கள், பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.கோமதி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக