தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற திட்டத்தின் கீழ், 2வது நாளாக, திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (20.06.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின்படி தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜூன் மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் அரூர் வட்டத்தில் நேற்றைய தினம் (19.06.2024) முதல் இன்று (20.06.2024) காலை வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள். இந்த ஆய்வினை தொடர்ந்து, அரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில்ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து தீர்த்தமலை ஊராட்சி, இருளர் குடியிருப்பு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் உங்கள் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள். இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் 20.06.2024 அதிகாலை முதல் அரூர் வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., வர்கள் தலைமையில் 2வது நாளாக நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம், லிங்காபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பால் உற்பத்தியாளர்களிடம் கொள்முதல் செய்யும் பணிகளையும், பால் கொள்முதலுக்கான பணம் பட்டுவாடா செய்த விவரங்கள், ரூ.3.00 ஊக்கத்தொகை வழங்கிய விவரம், போனஸ் வழங்கிய விவரம் குறித்து பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து, சுகாதாரமாகவும், தரமாகவும் பால் கொள்முதல் செய்வதற்கும், பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய பணம் பட்டுவாடா, போனஸ் மற்றும் அரசின் நல திட்ட உதவிகள் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என சங்கத்தின் செயலாளர் மற்றும் பணியாளரிடம் தெரிவித்தார்.
கால்நடைகளுக்கு தீவனம், தாது உப்பு கலவை போன்றவை வழங்கப்படுவது குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் பால் உற்பத்தியாளர்களிடம் கேட்டறிந்து, தனியார் கட்டிடத்தில் இயங்கி வரும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கு தனி இடம் ஒதுக்கி கட்டிடம் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைதொடர்ந்து, அரூர் ஊராட்சி ஒன்றியம், கோவிந்தசாமி நகர் பகுதியில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ.40.75 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அரூர் ஊராட்சி ஒன்றியம், அக்ரகாரம் ஊராட்சி, அ.விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு செய்து, பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தரமான உணவு சமைத்து உரிய நேரத்தில் பரிமாற வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் அரூர் வட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் தகுதியான பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டுமெனவும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தரமானதாக இருக்க வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.எஸ்.கணேஷ் , பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ம.விஜய்சங்கர், வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.கலைச்செல்வி, திரு.இளங்குமரன் மற்றும் துணைப் பதிவாளர் (பால்வளம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக