தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆஃபப., அவர்கள் இன்று (21.06.2024) தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்ளின் உத்தரவின்படி, கள்ளச்சாராயம், சட்ட விரோத மதுபானம் விற்பனை தடுப்பு குறித்து வருவாய்த்துறை, காவல்துறை ஆகிய துறைகளை சார்ந்த வருவாய் ஆய்வாளர்கள், துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு கள்ளச்சாரயம் கட்டுப்படுத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள கிராம அளவில் கண்காணிப்பு குழு அமைக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனையில் ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவும், போலி மதுபானம் விற்பனை செய்பவர் கண்டறியப்பட்டால் உடன் தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் கள்ளச்சாராயம் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் மாதம் இருமுறை நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பான புகார்களை 6369028922 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் தெரிவிக்கலாம்.
அனைத்து பகுதிகளிலும் போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். காவல்துறை, வருவாய்த்துறை என அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பால்பிரிண்ஸ்லி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், வருவாய் கோட்டாட்சியர்கள் திருமதி.காயத்ரி, திரு.வில்சன் ராஜசேகர், உதவி ஆணையர் (ஆயம்) திருமதி.நர்மதா, மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) திருமதி.மகேஸ்வரி, வட்டாட்சியர்கள் உட்பட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக