வத்தல்மலை, பெரியூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய ஏடிஎம் (ATM) மையம் திறப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 22 ஜூன், 2024

வத்தல்மலை, பெரியூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய ஏடிஎம் (ATM) மையம் திறப்பு.


தருமபுரி மாவட்டம், வத்தல்மலை, பெரியூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய ஏடிஎம் (ATM) மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்து, தகவல். 

தருமபுரி மாவட்டம், வத்தல்மலை, பெரியூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இந்தியன் வங்கியின் புதிய ATM மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (22.06.2024) திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, இதுவரை பேருந்து வசதியே இல்லாத தருமபுரி மாவட்டம் வத்தல்மலைக்கு, முதன்முதலாக புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் கடந்த 13.08.2022 அன்று தொடங்கிவைக்கப்பட்டது. தற்போது இப்பேருந்து வசதி மலை கிராம மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளது.


நகரப் பகுதிக்கு இணையாக மலைப்பகுதிகளில் வாழும் பொது மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதியும் கிடைக்க வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதல் படி மற்றும் இப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏடிஎம் மையம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.


இதனால் தருமபுரி ஊராட்சி ஒன்றியம் வத்தல்மலை ஊராட்சி, பெரியூர், கட்டலங்காடு, கடுங்கல்லூர், சின்னாங்காடு, ஒன்றியகாடு, புலியனூர், மன்னாங்குளி நாய்க்கனூர், பால் சிலம்பு ஆகிய 9 மலை கிராமங்களில் உள்ள சுமார் 700 குடும்பத்தைச்சார்ந்த 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கல்வி உதவித்தொகை, சுய உதவிக் குழுவின் கடன் தொகை, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் வழங்கப்படும் பால் பணம் பட்டுவாடா, 100 நாள் பணியின் மூலம் வழங்கப்படும் சம்பளத் தொகை, PM கிஷான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு கிடைக்கப் பெரும் ரூ. 6000 உள்ளிட்ட பல்வேறு வகையான நிதிகளை இப்புதிய ஏடிஎம் மூலம் பெற்று, பயன் பெற உள்ளனர்.


முன்னர் அவசர தேவைகளுக்காக வங்கியில் பணம் எடுக்க சுமார் 25 கிலோ மீட்டர் பயணம் செய்து தருமபுரி நகரப் பகுதிக்கு வந்து பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது இப்புதிய ஏடிஎம் மூலம் உடனடியாக பெற்று, பயன்பெற முடியும். மேலும், வத்தல்மலைக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, பேருந்து வசதி சாலை வசதிகள் குடிநீர் வசதி, மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் கூடுதல் பேருந்து வசதி, ஆம்புலன்ஸ் வசதி, வங்கி கிளை போன்ற வசதிகள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து படிப்படியாக நிறைவேற்றப்படும். மகளிர் திட்டம் மற்றும் முன்னோடி வங்கியின் சார்பில் வத்தல்மலை பகுதியில் சிறப்பு முகாம் நடத்தி வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம் அட்டைகள் வழங்கும் பணி விரைவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்


இதனை தொடர்ந்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் வத்தல்மலையில் சுற்றுலாவை மேம்படுத்தும் பொருட்டு ரூ.2.23 கோடி மதிப்பில் உணவகம் மற்றும் வாகனம் நிறுத்தம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு வழங்க ஒப்பந்ததாரர் மற்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கி தருமபுரி மண்டல மேலாளர் திருமதி.பத்மாவதி ஸ்ரீகாந்த், துணை மண்டல மேலாளர் திரு.பீரேந்திர குமார், இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் திரு.ராமஜெயம், வட்டாட்சியர் திரு.ஜெயசெல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் திரு.தங்கராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad